காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 2-வது சர்வதேச பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உட்பட 13 கிராமங்களில் இருந்து சுமார் 4,800 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இந்த விமான நிலையம் ஏகனாபுரத்தை மையமாக வைத்து அமைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளதாலும், அந்த கிராமத்தில் மொத்தமாக நிலம் எடுக்கப்படுவதாலும் பொதுமக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டிட்கோ சர்வதேச ஒப்பந்தப் புள்ளியை கோரியுள்ளது. பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக தொழில்நுட்பம், பொருளாதார அறிக்கை தயாரிப்பது, விமான போக்குவரத்தின் வளர்ச்சியை ஆய்வு செய்வது, மீனம்பாக்கம் விமான நிலையம் மற்றும் பரந்தூர் விமான நிலையத்துக்கு இடையே உள்ள சாலை மற்றும் ரயில் போக்குவரத்து தேவைகள் தொடர்பாக ஆய்வு செய்வது தொடர்பாக ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று 200-வது நாளாக விமான நிலையத்துக்கு எதிரான போராட்டம் நீடித்து வருகிறது. இந்த 200-வது நாள் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல் முருகன் கலந்து கொண்டுள்ளார். மேலும் இந்த போராட்ட நிகழ்விற்கு சென்று கொண்டிருந்த பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வனை, போலீஸார் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அவரை மாகரல் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது பசுமை விமானநிலையம் அமைப்பதற்காக 13 கிராமங்களை சேர்ந்த 4000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதனால் பாதிக்கப்படும் விவசாயிகள், பொதுமக்கள் 200வது நாளாக ஜனநாயக வழியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டம் நடத்துபவர்களின் அழைப்பின் பேரில் அவர்களை சந்திக்கச் சென்ற பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் வழ. வெற்றிச்செல்வன் தடுத்து நிறுத்தப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஜனநாயக வழியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது சட்டவிரோதமான செயல் அல்ல. எனவே அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், போராட்டம் நடத்தும் மக்களுடன் தமிழ்நாடு அரசு பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன் எனப் பதிவிட்டுள்ளார்.
அதேபோல, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், பரந்தூரில் வானூர்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்புத்தெரிவித்து 200வது நாளாக போராடி வரும் மண்ணின் மக்களுக்கு ஆதரவளிக்கச் சென்ற பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தை சேர்ந்த தம்பி வழ. வெற்றிச்செல்வன் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, கைதுசெய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கும், உணர்வுக்கும் மாறாக எதேச்சதிகாரப்போக்கோடு திணிக்கப்பட்ட இத்திட்டத்திற்கு எதிராகப் போராடுவோரையும், அவர்களுக்கு ஆதரவளிப்போரையும் காவல்துறையைக் கொண்டு அச்சுறுத்துவதும், மிரட்டுவதுமான போக்கு அப்பட்டமான சனநாயகப்படுகொலையாகும்.
ஏற்கனவே, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபயணமாய் சென்று, தங்களது கோரிக்கையை உலகுக்குத் தெரிவிக்க முயன்ற அம்மண்ணின் மக்களின் செயல்பாட்டைத் தடுத்து நிறுத்திய திமுக அரசு, 200வது நாள் போராட்டத்திற்கு ஆதரவளிக்கச் செல்வோரைத் தடுத்து நிறுத்திக் கைது செய்வது பாசிசத்தின் உச்சமாகும்.
விவசாயநிலங்களையும், வாழ்விடங்களையும் பாதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டிருக்கிற அத்திட்டத்தை எதிர்த்து இறுதிவரை அம்மக்களோடு நாம் தமிழர் கட்சி துணைநிற்கும், சனநாயகப் போராட்டம், சட்டப்போராட்டமென என எல்லா நிலையிலும் அத்திட்டத்திற்கு சமரசமின்றி களத்தில் நிற்போமெனவும் உறுதிகூறுகிறேன். போராட்டத்தின் தொடக்க நிலையிலேயே பரந்தூர் மக்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்ததுபோல, மீண்டும் அம்மக்களைச் சந்திக்க நானே நேரடியாகக் களத்திற்குச் செல்வேன். சூழலியல் அமைப்புகளையும், சமூக ஆர்வலர்களையும் அடக்கி ஒடுக்குவதுபோல, அப்போது முடிந்தால் என்னைத் தடுத்துப் பார்க்கட்டும் எனப் பதிவிட்டுள்ளார்.