சென்னை பசுமை விமான நிலையம் ( chennai green field airport )
 
சென்னையில் இரண்டாவது விமான நிலையத்திற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு மற்றும் அதை ஒட்டியுள்ள மொத்தம் 13 கிராமங்களில் இருந்து சுமார் 4800- க்கும் அதிகமான ஏக்கர் பரப்பிலான நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த திட்டத்திற்கான மதிப்பு சுமார் 20,000 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 3000 ஏக்கர் அளவிற்கு, பட்டா நிலங்களாகவும், மீதம் உள்ள நிலங்கள் அரசு நிலமாகவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.




ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு  ஆகிய கிராமங்களில் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலையம் அமைய உள்ள பகுதியில், ஏரி ,குளம், கால்வாய் என ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


தொடர் போராட்டத்தில் கிராம மக்கள்

 

உண்ணாவிரதப் போராட்டம், கருப்புக்கொடி போராட்டம், சாலை மறியல், தலைமை செயலகத்தை நோக்கி பேரணி என பல்வேறு விதமான போராட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில் 453வது நாளாக இரவு நேரங்களில் ஒன்று கூடி மத்திய மாநில அரசுகளை எதிர்த்து கோஷங்களை எழுப்பி நாள்தோறும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விமான நிலையம் அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் நடைபெற்ற ஆறு கிராம சபை கூட்டங்களில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஒருமனதாக தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளனர்.



 

கிராமசபை கூட்டங்கள்

 

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள் ஒன்றிணைந்து 464 வது நாளாக கிராம மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் உள்ளாட்சி தினத்தை  ஒட்டி இன்று நடைபெற இருக்கிற கிராம சபை கூட்டத்தை நான்காவது முறையாக புறக்கணித்து வருகின்றனர். இதுவரை 6 கிராம சபை கூட்டத்தில், பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் நான்காவது முறையாக கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து வருகின்றனர்.


 


இதுகுறித்து கிராம பொதுமக்கள் தெரிவித்ததாவது: விமான நிலையம் அமைவதற்கு சுமார் 464வதுவ்நாளாக தொடர் போராட்டத்தில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். இதுவரை எங்கள் போராட்டம் குறித்து தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. 6 முறை கிராம சபை கூட்டங்கள் மூலம் எங்களுக்கு பரந்தூர் விமான நிலையம் எங்கள் ஊரில் அமையக்கூடாது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்பொழுதும் தமிழ்நாடு அரசு, எந்தவித பதிலும் அளிக்கவில்லை.




இதனை அடுத்து நான்காவது முறையாக கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து இருக்கிறோம். மச்சேந்திர நாதன் தலைமையிலான ஆய்வு குழுவிடம் எங்களுடைய அறிக்கையை நாங்கள் கொடுத்திருக்கிறோம். எங்களுடைய நீர் நிலைகள் இங்கு இருக்கும் மக்கள் குறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் கூட்டாட்சி மற்றும் மாநிலத்தில் சுயாட்சி பேசும் தமிழ்நாடு முதலமைச்சர், கிராம சபை  சுய ஆட்சி பற்றி ஏன் பேச மறுக்கிறார்  என பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். நாங்கள் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் எந்தவித பதிலும் எங்களுக்கு அளிக்கவில்லை. நாங்க கிராம சபை கூட்டத்தை புறக்கணித்துக் கொண்டே வருகிறோம். ஆனால், இதற்கு முடிவு எப்பொழுது ? இப்படியே தொடர்ந்தால் எங்கள் வாழ்வாதாரம் எப்படி ?  அடுத்தவரும் கிராம சபை கூட்டத்தை கூட நாங்கள் புறக்கணிப்போம். அப்பொழுது கூட அரசு இப்படியே இருக்குமா ? ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் மக்களின் பிரச்சினையை அணுக வேண்டும் என தெரிவிக்கின்றனர்