காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சுமார் 13 கிராமங்களை உள்ளடக்கி 4750 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் 2வது புதிய பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் நாகப்பட்டு, நெல்வாய், தண்டலம், மடப்புரம், ஏகனாபுரம், மேலேறி ஆகிய கிராமப்புறங்களில் விளைநிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளது.
விமான நிலையம் அமைப்பதினால் தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமான விளைநிலங்களும் பாதிக்கப்படும் எனக் கூறி பரந்தூர் விமான நிலையம், அமைக்க பாதிக்கப்படும் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கிராமசபை கூட்டங்களிலும் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றனர்.
மத்திய மாநில அரசுகளை கண்டித்து நாள்தோறும் இரவு நேரங்களில் தொடர் போராட்டங்களை கிராம மக்கள் நடத்தி வரும் நிலையில் 150-வது நாளாக இன்று ஏகனாபுரம் கிராம மக்கள் அனைவரும் பள்ளி வளாகத்தில் ஒன்று கூடி கைகளில் மெழுகுவர்த்தியினை ஏந்தியவாறு, விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், திட்டத்தினை கைவிட வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி வித்தியாசமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 150 வது நாளாக கடும் குளிரின் பொருட்படுத்தாமல் தலையில் துண்டு கட்டு கொண்டு மெழுகுவத்தி ஏந்தி போராட்டத்தில் கிராமத்தில் உள்ள குழந்தைகள், இளைஞர்கள் முதியவர்கள், பெண்கள் வரை போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
சென்னை பசுமை விமான நிலையம்
சென்னையில் இரண்டாவது விமான நிலையத்திற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு மற்றும் அதை ஒட்டியுள்ள மொத்தம் 13 கிராமங்களில் இருந்து சுமார் 4800க்கும் அதிகமான ஏக்கர் பரப்பிலான நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த திட்டத்திற்கான மதிப்பு சுமார் 20,000 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 3000 ஏக்கர் அளவிற்கு, பட்டா நிலங்களாகவும் , மீதம் உள்ள நிலங்கள் அரசு நிலமாகவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு ஆகிய கிராமங்களில் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலையம் அமைய உள்ள பகுதியில், ஏரி ,குளம், கால்வாய் என ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
”இனிமே எல்லாமே அறிக்கையில்தான் இருக்கு” - பரந்தூர் விமான நிலையம் குறித்து அமைச்சர்கள் தகவல்
ஒப்பந்தம் பெறும் நிறுவனம், விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் நீர்நிலைகள் உள்ள பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்கப்படுவது குறித்து முழுமையாக ஆராய்ந்து, அளிக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே அங்கு விமான நிலையம் அமைக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து அரசு முடிவு செய்யும். விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் பொதுமக்களை இன்னலுக்கு உட்படுத்த நாங்கள் முனையவில்லை. போரட்டக்குழுவினரின் அனைத்து கோரிக்கைகள் தொடர்பாகவும் ஆய்வு நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. அதுவரை பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் எனவும், ஆய்வுக்காக வரும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு நல்கும்படியும் கேட்டுக்கொண்டனர். பல்வேறு தரவுகளின் அடிப்படையில் விவசாயிகள் பாதிக்காத வண்ணமே அரசின் இறுதி முடிவு எடுக்கப்படும் என, அமைச்சர்கள் உறுதிபட கூறினர். அதேநேரம், அரசின் சரியான முடிவு கிடைக்கும் வரை மாலை நேரத்தில் நாங்கள் நடத்தி வரும் போராட்டத்தை தொடர்ந்து நடத்த முடிவு செய்துள்ளதாகவும், போராட்டக்குழுவை சேர்ந்த சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.