பானிபூரியில் புழு இருந்ததால் வியாபாரி வைத்திருந்த உணவுப் பொருட்களைப் பரிசோதித்த பொதுமக்கள் அது கெட்டுப்போனவையாக இருந்ததால் அந்த நபரைக் கட்டிவைத்து அடித்தனர்.
அண்மையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஒரு சம்பவம் நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர பழைய பேருந்து நிலையம் அருகில் ஆரணியைச் சேர்ந்த காதர் பாட்ஷா என்பவருடைய அசைவ 7ஸ்டார் உணவகத்தில் பிரியாணி அருந்திய சிறுமி உயிரிழந்தார். 40-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். பல வருடங்களுக்கு மேல் இயங்கி வரும் ஓர் உணவகத்தில் உணவருந்தி சிறுமி உயிரிழந்த பின்னர் அங்கே உணவுத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கெட்டுப்போன இறைச்சியைப் பயன்படுத்தி உணவை சமைத்ததாலேயே உணவருந்திய சிறுமி உயிரிழந்ததும், மற்றவர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதும் தெரியவந்தது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதுமே ஆங்காங்கு உணவுத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பல கடைகளிலும் சுகாதாரமற்ற முறையில் இருந்த அடுப்பங்கரைகள், நாள்பட்ட உணவுப் பொருட்கள் என திடுக்கிடும் வகையில் தரம் இருந்தது தெரியவந்தது.
நாம் அருந்தும் உணவுக்கான கட்டணம் அதற்கான ஜிஎஸ்டி, சிஎஸ்டி என்றெல்லாம் வசூலித்துக் கொள்ளும் பெரும் உணவகங்களே இப்படியென்றால், தெருவோரக் கடைகளிலும் ஒன்றிரண்டு சுகாதாரத்தில் தவறத்தான் செய்யும். ஆனால், பெரும்பாலும் சாலையோரக் கடைகளில் அடுப்பும், சமையலும் நம் கண் முன்னாலேயே இருப்பதால் பெரும்பாலும் தரத்தைப் பற்றி சாமான்ய மக்கள் கவலையின்றி உண்டு செல்கின்றனர்.
அப்படியிருக்க பானிபூரி வியாபாரி செய்த தவற்றால், அவரை பொதுமக்கள் தாக்கியிருக்கிறார்கள். சென்னை, அம்பத்தூர் அருகே உள்ளது பட்டரைவாக்கம். இப்பகுதியில் இயங்கிவந்த பானிபூரி கடையில் இளைஞர் ஒருவர் பானிபூரி வாங்கிச் சாப்பிட, அதில் புழு மிதந்ததைப் பார்த்து அதிர்ந்துள்ளார். உடனே பானிபூரி வியாபாரி வைத்திருந்த உணவுப் பொருட்களைப் பரிசோதிக்க அதில் உருளைக்கிழங்கு கெட்டுப்போய் புழு மிதப்பதாக தெரியவந்தது
இதனால் அந்த இளைஞரைப் பொதுமக்கள் கட்டிவைத்து தாக்கியுள்ளனர். பானிபூரி வியாபாரின் செயல் குற்றமென்றால் சட்டத்தைக் கையிலெடுக்கும் செயலும் குற்றம்தான். பெரிய கடைகளின் குற்றம் அம்பலமானால் செய்தியாக மட்டுமே பார்க்கும் மக்கள் எளியவர்களின் குற்றத்துக்கு தாங்களே தண்டனை கொடுக்கும் கும்பல் மனப்பான்மை தவறானது. பானிபூரி வியாபாரியை கையும் களவுமாகப் பிடித்தவுடன் அவரை காவல்நிலையத்தில் தான் ஒப்படைத்திருக்க வேண்டும்.
ஏற்கெனவே பானிபூரிக்கான பூரி மாவைத் தொழிலாளர்கள் காலால் மிதித்துப் பிசைவதாக சில வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. அதேபோல் பிரபல சேமியா நிறுவனத்தில் காலால் சேமியாவைப் பரப்பி காயவைக்கும் வீடியோவும் வெளியானது. தற்போது உருளைக்கிழங்கில் புழு நெளிந்த சம்பவம் பெரிய கடைகள் மட்டுமல்லாது எல்லா இடங்களிலும் எப்போதுமே உணவுத் துறை அதிகாரிகள் தரத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதாக உள்ளது.