காலணியில் மறைத்து வைக்கப்பட்ட சாவி
சென்னை பெரம்பூர் வெங்கட்ராமன் தெருவில் வசித்து வருபவர் சுகுமாரன் ( வயது 66 ) இவர் டூல்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 10 ஆம் தேதி காலை வழக்கம் போல வேலைக்கு கிளம்பும் போது அவரது வீட்டை பூட்டி சாவியை வீட்டிற்க்கு வெளியே காலணியில் மறைத்து வைத்து விட்டு தனது கடைக்கு சென்றுள்ளார். பின்னர் மதியம் வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு திறந்து இருந்துள்ளது. மேலும் வீட்டிற்குள் இருந்த சுமார் 4, 000 ரூபாய் பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் காணாமல் போயிருந்துள்ளது.
சிசிடிவி காட்சிகள் ஆய்வு
இது குறித்து சுகுமாரன் செம்பியம் குற்றப் பிரிவில் புகார் அளித்தார். செம்பியம் குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சி.சி.டிவி காட்சிகளை பார்த்த போது ஏற்கனவே சில குற்ற வழக்குகளில் தொடர்புடைய பெண் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி பகுதியைச் சேர்ந்த இந்துமதி ( வயது 35 ) என்ற பெண்ணை கைது செய்தனர்.
பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை
இவரிடம் நடத்திய விசாரணையில் இந்துமதி ராணிப்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு வந்து பூட்டிய மற்றும் திறந்து உள்ள வீடுகளை நோட்டமிட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் சம்பவத்தன்று சுகுமாரன் வீடு மற்றும் பெரம்பூர் ராமச்சந்திரன் தெருவில் உள்ள மற்றொரு வீடு என இரண்டு வீட்டில் இவர் கைவரிசை காட்டியது தெரிய வந்தது.
இதனையடுத்து இவரிடம் இருந்து 7000 பணம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்துமதி மீது ஏற்கனவே இராணிப்பேட்டை, அரக்கோணம், பெரும்பாக்கம், போரூர், மதுரவாயில் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட இந்துமதி மீது வழக்கு பதிவு செய்த செம்பியம் குற்றப் பிரிவு போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
