தமிழ்நாடு அரசு சமீப காலமாக சுற்றுலா தளங்களை மேம்படுத்தவும், புதிய சுற்றுலா தலங்களில் உருவாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளில் சுற்றுலா பகுதிகளை தமிழ்நாடு அரசு மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு சார்பில், முட்டுக்காடு படகு குழுமத்தை தமிழ்நாடு அரசு மேம்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கோவளம் கடற்கரை அருகே, கோவளம் நீல கொடி அங்கீகாரம் பெற்ற கடற்கரையை உருவாக்கியது. இதற்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது. வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் இந்த இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிவதால், சுற்றுலாத்துறைக்கு வருமானம் பெருகி வருகிறது. விரைவில் முட்டுக்காடு பகுதியில், மிதவை உணவகமும் செயல்பாட்டிற்கு வரவுள்ளது.
நந்தவனம் பாரம்பரிய பூங்கா
அந்த வகையில் கிழக்கு கடற்கரை சாலையை மையமாக வைத்து பல்வேறு திட்டங்களை சுற்றுலாத்துறை அறிவிக்க உள்ளது. ஒரு பகுதியாக தமிழக அரசின் சுற்றுலா துறை சார்பில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் கோவளம் அருகே 223 ஏக்கர் பரப்பளவில் ரூ.100 கோடி செலவில் நந்தவனம் பாரம்பரிய பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. இந்த திட்டம் மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 100 கோடி ரூபாயில் அமைய உள்ள இந்த பூங்காவில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற உள்ளதாகவும் அது குறித்த தகவல்களும் வெளியாகி உள்ளன.
பூங்காவில் சிறிய வனம், விஹாரம், மைதானம் என 3 பிரிவுகள் இடம் பெற உள்ளது. இந்தப் பூங்காவில் தமிழ்நாடு தொடர்பான பாரம்பரிய சிறப்பு அம்சங்களை குறிக்கும் சிலைகள் அமைக்கப்பட உள்ளன. நாட்டுப்புற தெய்வங்களின் சிலைகளும் இந்த பூங்காவில் அமைக்கப்பட உள்ளது. அதேபோல் குழந்தைகளைக் கவரும் வகையிலும் இந்த பூங்காவில் பல்வேறு விளையாட்டுகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிறப்பம்சங்கள் என்னென்ன ?
ஒளிரும் பூங்காக்கள், குழந்தைகள் விளையாடும் பகுதி, கிரக தோட்டம், மலர் தோட்டம் போன்றவற்றுடன் அமைக்கப்படும். மேலும் மைதானத்தில் சுமார் 13 ஏக்கர் பலப்பளவில், 25000 பேர் கூடும் வகையில் கூடம் அமைக்கப்பட உள்ளது. வாலிபால், டென்னிஸ், கூடைப் பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளும் விளையாடுவதற்கு ஏற்ப மைதானம் அமைக்கப்பட உள்ளது. மேலும் இளைஞர்களை கவரம்பகையில் 2 நட்சத்திர விடுதிகள் அமைக்கப்பட உள்ளன. மிகப்பெரிய வாகன நிறுத்த இடமும் இந்த பூங்காவிற்காக அமைக்கப்பட உள்ளது. சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான பிரம்மாண்ட பார்க்கிங் அமைக்கப்பட உள்ளது.
இ.சி.ஆர்-ஐ மாற்றப் போகும் பூங்கா
வயதானவர்கள் எளிதாக அணுகும் வகையில் நடைபாதைகள் அமைக்கப்பட உள்ளன. உள்ளே சுற்றுச்சூழலுக்கு மாசுபடாமல் இருக்க சைக்கிள் பாதைகளும் அமைக்கப்பட உள்ளன. மேலும் நீர் வழிகள் அமைக்கப்பட்டு, அவை எளிதில் அணுகும் வகையில் அமைக்கப்பட உள்ளன. மேலும் இந்தப் பகுதியில் படகு சவாரி ஆகியவை இடம் பெற உள்ளது. கருப்பொருள் சிற்பங்கள், சிறு கடைகள், திறந்தவெளி திரையரங்குகள், கலாச்சார குடில்கள், உணவு அரங்கம் ஆகியவையும் அமைக்கப்படுகின்றன. இந்த பூங்கா செயல்பாட்டிற்கு வந்தவுடன், கிழக்கு கடற்கரை சாலையில் மற்றொரு முக்கிய சுற்றுலா தளமாக இது மாறும் என்பதில் மாற்று கருத்து இல்லை.