Reverse Mortgage Loan என்பது என்ன ?

Continues below advertisement

ரிவர்ஸ் மார்ட்கேஜ் என்பது சொந்த வீடு வைத்திருக்கும் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட திட்டமாகும். இது வழக்கமான வீட்டுக் கடனுக்கு முற்றிலும் எதிரானது.

வழக்கமான கடனில் நீங்கள் வங்கிக்குத் தவணை செலுத்துவீர்கள். ஆனால் இதில், வங்கி உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் பணத்தைக் கொடுக்கும். உங்கள் வீடு வங்கியிடம் அடமானமாக வைக்கப்படும். இருப்பினும், கடன் பெறுநர் தனது வாழ்நாள் முழுவதும் அதே வீட்டில் தொடர்ந்து வசிக்கலாம். அதே சமயத்தில் மாதந்தோறும் வருமானம் பெறுவார்.

Continues below advertisement

எப்படிச் செயல்படுகிறது ?

இந்த ஏற்பாட்டில் வங்கியானது உங்கள் சொத்தின் சந்தை மதிப்பைக் கணக்கிட்டு, வீட்டு உரிமையாளர் பெற வேண்டிய தொகையை நிர்ணயம் செய்கிறது. இந்தத் தொகையை வங்கியானது ஒரு பெரிய தொகையாகவோ அல்லது மாதத் தவணையாகவோ (மாதாந்திர பென்ஷன் போல) வழங்கும்.

எடுத்துக்காட்டாக , உங்கள் வீட்டின் மதிப்பு ரூ.50 லட்சம் எனில், வங்கி உங்களுக்கு மாதந்தோறும் ரூ. 20,000 முதல் ரூ. 30,000 வரை வழங்கலாம். இது சொத்தின் மதிப்பு, கடன் பெறுநரின் வயது மற்றும் வங்கியின் விதிகளின் அடிப்படையில் அமையும். இதில் கடன் பெறுநர் வாழ்நாள் முழுவதும் வங்கிக்கு எந்தத் தொகையையும் திருப்பிச் செலுத்தத் தேவையில்லை.

வங்கி பணத்தை எவ்வாறு மீட்கும் - வங்கி நடவடிக்கை என்ன ?

வீட்டின் உரிமையாளர் மறைந்த பிறகு, வங்கியானது நிலுவையில் உள்ள கடன் தொகையை மீட்பதற்காக அந்த சொத்தை விற்பனை செய்யும். எனினும், சட்டபூர்வமான வாரிசுகளுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவர்கள் நிலுவையில் உள்ள கடன் தொகையைச் செலுத்தி விட்டு வீட்டை மீட்டுக் கொள்ளலாம். ஒரு வேளை, சொத்தின் மதிப்பு கடனை விட அதிகமாக இருந்தால், மீதம் இருக்கும் தொகை வாரிசுகளுக்கு வழங்கப்படும்.

தகுதி மற்றும் பயன்பாடு ;

ரிசர்வ் வங்கி அங்கீகாரம் பெற்ற இத்திட்டம் தற்போது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் சில தனியார் வங்கிகளில் கிடைக்கிறது. இத்திட்டத்திற்கு தகுதி பெற, விண்ணப்பதாரர் 60 வயதிற்கு மேற்பட்டவராகவும், சொந்த வீடு கொண்டவராகவும், அந்த வீட்டின் மீது வேறு எந்தக் கடனும் இல்லாதவராகவும் இருக்க வேண்டும்.

அந்த வீட்டை விண்ணப்பதாரர் உபயோகித்துக் கொண்டிருக்க வேண்டும். பென்ஷன் அல்லது வேறு வருமானம் இல்லாத மூத்த குடிமக்கள், பணி ஓய்வுக்குப் பிறகு சீரான மாத வருமானம் பெறுவதற்கு இந்தத் திட்டம் மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது.