ஆக்கிரமிப்பு தகவலில் தவறான தகவல் கொடுத்ததால் , தகவல் ஆணையம் சென்னை மாநகராட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

Continues below advertisement

சென்னை மாடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் புகழ் பாலன். இவரது பாட்டி அமிர்தம்மாள் வீட்டை போலி ஆவணங்கள் வாயிலாக, வாடகைதாரர் அபகரித்து கொண்டதோடு, சொத்து வரியிலும் பெயர் மாற்றம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 2023ம் ஆண்டு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் , சென்னை மாநகராட்சியிடம் , புகழ்பாலன் விளக்கம் கேட்டிருந்தார். மனு மீதான தினசரி முன்னேற்ற அறிக்கை மற்றும் ஆவண நகல்கள் உள்ளிட்ட 12 தகவல்களை கோரியிருந்தார். தகவல் கிடைக்காததால் மேல் முறையீடு செய்தார்.

இம்மனு மீதான விசாரணையில் , மாநில தலைமை தகவல் ஆணையர் முகமது ஷகீல் அக்தர் பிறப்பித்த உத்தரவில் ; 

Continues below advertisement

ஆணையத்தின் முன் உள்ள ஆவணங்களை பரிசீலித்ததில் , மனுதாரரின் மனுவிற்கும் , முதல் மேல்முறையீட்டு மனுவிற்கும், சென்னை மாநகராட்சி எந்த தகவலையும் அளிக்கவில்லை என்பது தெரிகிறது. எனவே அப்போதைய ஐந்தாவது மண்டலம் பொதுத் தகவல் அலுவலரும் , தற்போதைய கோடம்பாக்கம் மண்டல வருவாய் பிரிவு அதிகாரியுமான பிரகாஷ் ,  அப்போதைய மேல்முறையீட்டு அலுவலரும் , தற்போதைய தூத்துக்குடி மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளருமான தமிழ்ச்செல்வன் ஆகியோர் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்பதற்கான விளக்கத்தை 15 தினங்களுக்குள் அளிக்க வேண்டும்.

இருவரிடமும் தற்போதைய பொதுத் தகவல் அலுவலர் விளக்கம் கேட்டு , வரும் 6 - ம் தேதிக்குள் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விசாரணையில் ஆஜரான பொதுத் தகவல் அலுவலர் , மனுதாரருக்கு இனவாரியான பதில்களை அனுப்பி உள்ளதாகத் தெரிவித்தார். மனுதாரரோ தனக்கு அளிக்கப்பட்ட தகவல்கள் தவறானவை. ஆவணங்களின் நகல்கள் அளிக்கப்படவில்லை என்றார்.

எனவே ராயபுரம் மண்டல செயற்பொறியாளர் , மனுதாரரின் மனுவை சரியாக படித்துப் பார்த்து , சரியான திருத்திய ஆவணங்களின் அடிப்படையில் , இன வாரியான தகவல்கள் மற்றும் நகல்களை, 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும். தகவல்களை மனுதாரர் பெற்றதற்கான தபால் சான்றின் நகலை , ஆணையத்தில் நேரடியாக ஆஜராகி சமர்ப்பிக்க வேண்டும் என இவ்வாறு கூறப்பட்டுள்ளது.