பொங்கல் பரிசு தொகுப்பில் பொதுமக்களுக்கு என்ன வழங்கலாம் என்பது குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார்.


தை திருநாளான பொங்கலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசில் என்னென்ன பொருட்களை வழங்குவது என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியக்கருப்பன் மற்றும் மூத்த அமைச்சரான துரைமுருகனோடு ஆலோசனை நடைபெற்றது.


இதைத்தொடர்ந்து என்னென்ன பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் வழங்குவது என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்.


திமுக அரசு பொறுப்பேற்றதும் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்போடு சேர்த்து பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை, உப்பு மற்றும் மஞ்சள் பை ஆகிய 21 பொருட்கள் வழங்கப்பட்டன. ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரொக்கத் தொகை வழங்கப்படவில்லை.


கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசு தொகுப்போடு ரூ.2,500/- ரொக்கம் தரப்பட்ட நிலையில், திமுக ஆட்சியிலும் அது தொடரும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு ரொக்க பரிசை தவிர்த்த திமுக அரசு 21 பொருட்களை வழங்கியது.  இந்த முறை மக்களின் கடந்த ஆண்டு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பொங்கல் பரிசு பொருளோடு ரூ.1,000/- ரொக்க பரிசு வழங்கவும் திமுக அரசு முடிவுவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இருப்பினும் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் என்னென்ன பொருட்கள் வழங்கப்படும், ரொக்கம் வழங்கப்படும் என்பது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.


இதற்கு முன்னதாக ஜனவரி மாதம் வரவுள்ள பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்க முதலமைச்சர் தலைமையில் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.


பொங்கல் பண்டிகையின்போது ஏழை, எளியோர், ஆதரவற்றவர்கள், முதியோர், தமிழக அரசால் நியாயவிலைக் கடைகள் மூலம் இலவசமாக வேட்டி, சேலை வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது. வரும், 2023ம் ஆண்டுக்கான வேட்டி, சேலை உற்பத்திக்காக முதல் தவணையாக ரூ.243.96 கோடி தமிழ்நாடு அரசின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.


2023ம் ஆண்டு 1.80 கோடி பெண்கள், 1.80 கோடி ஆண்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கப்பட உள்ளது.


10 வருடங்களுக்கு பிறகு புதிய டிசைனில் அரசின் இலவச வேட்டி சேலை 2023 ஜனவரி 10 ம் தேதிக்குள் வழங்க திட்டம். சேலையில் 15 டிசைன்கள் மற்றும் பல நிறங்களில் சேலை, இதே போல 5 டிசைன்களில் ஆண்களுக்கான வேட்டி அனைவரும் விரும்பி அணியும் வகையில் தரத்துடன் இலவச வேட்டி சேலை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.