சென்னை ATM-ல் 5 லட்சம் பணம்! நேர்மையுடன் ஒப்படைத்த இளைஞர்: போலீஸ் பாராட்டு - நடந்தது என்ன?
சென்னையில் நடந்த பல்வேறு செய்திகளை சுருக்கமாக இங்கு காணலாம்.

ஏ.டி.எம் மையத்தில் கிடந்த ரூ.5 லட்சம்
சென்னை கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகர் அபிராமி அவென்யூவைச் சேர்ந்தவர் கண்ணன் ( வயது 36 ). இவர் அபிராமி அவென்யூவது 1 வது தெருவில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம் மையம் எதிரில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவர் ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க செல்லும் போது , ஏ.டி.எம். மையத்தில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டின் 10 கட்டுகள் கேட்பா ரற்று கிடந்துள்ளன. அவற்றை எடுத்த கண்ணன், கொடுங்கையூர் போலீஸ் உதவி ஆய்வாளர் முரளியிடம் ஒப்படைத்துள்ளார். கொடுங்கையூர் போலீசார் நடத்திய விசாரணையில் , ஏ.டி.எம்மில் பணம் நிரப்ப வந்த வங்கி ஊழியர்கள், பணத்தை விட்டு சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. ஏ.டி.எம் மையத்தில் கேட்பாரற்று கிடந்த 5 லட்ச ரூபாயை எடுத்து வந்து , காவல் நிலையத்தில் ஒப்படைத்த கண்ணனை போலீசார் பாராட்டினர்.
தூய்மை பணியின் போது கீழே கிடந்த தங்க சங்கிலி - மேயர் பாராட்டு
சென்னை அடையாறு மண்டலம் இ.சி.ஆர்., பிரதான சாலையில் , மருதீஸ்வரர் கோவில் எதிரே , துாய்மை பணியின் போது தங்கச் சங்கலியை தூய்மை பணியாளர் கிளாரா கண்டெடுத்துள்ளார். உடனடியாக நகையை திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து கிளாராவின் நேர்மையை முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி பாராட்டினர். இந்நிலையில் துாய்மை பணியாளர் கிளாராவை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு அழைத்து சால்வை அணிவித்து 10,000 ரூபாய் பரிசு கொடுத்து மேயர் பிரியா பாராட்டினார்.
தொலைபேசியில் , மெட்ரோ நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் நிலைய அலுவலகம் இயங்கி வருகிறது. இங்குள்ள பெண்கள் உதவி மையத்திற்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் ரயில் நிலையத்தில் வெடி குண்டு வைத்திருப்பதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார். அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து வெடி குண்டு நிபுணர்களுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். பின், வெடிகுண்டு இல்லை என உறுதியானது. எங்கிருந்து அழைப்பு வந்தது என்பது குறித்து கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாட்டர் வாஷ் கடையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
சென்னை மாதவரம் அருகே மஞ்சம்பாக்கம் காமராஜர் சாலை பகுதியில் வெங்கடேசன் என்பவர் 'ஸ்ரீ சக்தி வாட்டர் வாஷ்' கடை நடத்தி வருகிறார். இங்கு நேபாளத்தைச் சேர்ந்த பஞ்சும்ராஜ் புடாமகர் ( வயது 39 ) என்பவர் குடும்பத்துடன் தங்கி பணி புரிந்து வந்தார். இவர் தன் 2 - வது மகன் நாராயணன் உடன் சேர்ந்து மின் மோட்டார் மூலம் இயங்கும் குடிநீர் குழாயை வைத்து தரையை சுத்தம் செய்தார். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் மயங்கி விழுந்துள்ளார். 108 ஆம்புலன்சில் வந்த மருத்துவர் பரிசோதித்ததில் அவர் இறந்தது தெரிய வந்தது.
மே தினப் பூங்காவில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் - 4 பிரிவுகளில் வழக்கு பதிவு
சென்னை மாநகராட்சியில் ராயபுரம் , திரு.வி.க., நகர் மண்டங்களில் குப்பை கையாளும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து ஆகஸ்ட் 1 முதல் 13 - ம் தேதி வரை ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு , துாய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். பின் உயர்நீதிமன்ற உத்தரவின்படி , போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக் கட்டாக துாக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் சிந்தாதிரிப்பேட்டை மே தினப் பூங்காவில் துாய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட திரண்டனர். அவர்களை போலீசார் மீண்டும் குண்டுக் கட்டாக கைது செய்து அப்புறப்படுத்தினர். மேலும் அங்கு மீண்டும் துாய்மை பணியாளர்கள் ஒன்று கூடுவதை தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் மே தின பூங் காவில் திரண்ட தூய்மைப் பணியாளர்கள் மீது சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.




















