சென்னை அடுத்துள்ள மாமல்லபுரம் கடற்கரை கோயில் அமைந்துள்ளது. கி.பி எட்டாம் நூற்றாண்டில் (700-728) கருங்கற்களைக் கொண்டு கட்டுமானம் செய்யப்பட்ட கோயிலாகும். மாமல்லபுரக் கடற்கரையில் அமைந்துள்ள, கடற்கரைக் கோயில்கள் என அறியப்படுகின்ற கோயில்கள் அனைத்தும் இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவனால் கட்டப்பட்டவயே. ஒற்றைக்கல் யானை, அர்ஜுனன் தபசு, கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்குதல், மகிஷாசுரமர்த்தினி மண்டபம் ஆகியன இவற்றில் குறிப்பிடத் தகுந்தவை.
மாமல்லபுரம் என்ற அதிசயம்
மார்க்கோபோலோ மற்றும் அவருக்குப்பின் வந்த ஐரோப்பிய வணிகர்கள் இந்த இடத்தை ஏழு ஸ்தூபிகள் என்று அழைத்தனர். அந்த ஏழு ஸ்தூபிகளில் ஒன்று இந்த கடற்கரை கோயில் என்று நம்பப்படுகிறது. இக்கோயிலானது அவர்களது கப்பல்களுக்கு ஒரு கலங்கரை விளக்கம் போல செயல்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மீதமுள்ள ஆறு கோவில்கள் மற்றும் கட்டுமானங்களை, கடலுக்குள்ளே பலமுறை பார்த்ததாக மீனவர்களும் சிலர் தெரிவித்து வருகின்றனர். கடல் அரிப்பு மற்றும் கடல் உள்வாங்கும் போது சில கட்டிட அமைப்புகள் மகாபலிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் வெளியே தெரியும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்றுள்ளன. எனவே மிகச் சிறப்பு வாய்ந்த வரலாற்று பொக்கிஷமாக மகாபலிபுரம் பார்க்கப்படுகிறது.
கலை பொக்கிஷத்தை காண குவிய மக்கள்
மாமல்லபுரம் மிக முக்கிய கலை பொக்கிஷங்கள் அடங்கிய பகுதியாக இருப்பதால் தமிழ்நாடு முழுவதும் இருந்து இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளும், பல ஆயிரக்கணக்கான வெளிமாநில மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகளும், ஆர்வமுடன் ஆண்டுதோறும் மாமல்லபுரத்திற்கு படையெடுக்கின்றனர். கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும் மாமல்லபுரம் சிற்பக் கலையை ஆராய்வதற்கும், ரசிப்பதற்கு வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கமாக உள்ளது. மாமல்லபுரம் சிற்பங்கள் இந்தியா மற்றும் தமிழக கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக பேசுகின்றன.
இலவச அனுமதி எதற்காக ?
இந்தியாவில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 19-ம் முதல் 25-ம் வரையில் உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. பாரம்பரிய சின்னங்களை மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக, பல்வேறு இடங்களில் இலவச அனுமதி கொடுப்பது வழக்கமாக உள்ளது.
இதில், உலக பாரம்பரிய வாரத்தின் முதல் நாளான இன்று (19-11-2024) மாமல்லபுரம் மற்றும் மாமல்லபுரம் கடற்கரை கோயில் உள்ளிட்ட தொல்லியல் துறையின் பராமரிப்பில் அமைந்துள்ள பல்லவ மன்னர்களின் சிற்பக் கலையை உலகுக்கு பறைசாற்றும் கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜூனன் தபசு, கிருஷ்ண மண்டபம் மற்றும் வெண்ணைய் உருண்டை பாறை உள்ளிட்ட குடவரை சிற்ப வளாகங்களில், சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி இலவசமாக கண்டு ரசிக்கலாம் என மாமல்லபுரம் தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.