சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகிப்பவர் எஸ்.எம். சுப்ரமணியம். இவர், சனிக்கிழமை அன்று வடபழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அப்போது, தான் ஒரு நீதிபதி என்பதை வெளிப்படுத்தி கொள்ளாமல் பொது மக்களுடன் மக்களாக சிறப்பு தரிசனம் மேற்கொள்ள டிக்கெட் வாங்க சென்றுள்ளார்.


அப்போது, ஒரு சிறப்பு தரிசன டிக்கெட் 50 ரூபாய் என்ற கணக்கில், 150 ரூபாயை கொடுத்து மூன்று டிக்கெட்டை வாங்கியுள்ளார். ஆனால், இரண்டு 50 ரூபாய் டிக்கெட் மற்றும் ஒரு 5 ரூபாய் டிக்கெட் அவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக அவர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, கோயில் பணியாளர் அவரிடம் மோசமாக நடந்து கொண்டுள்ளார். இந்த சம்பவத்தை அவர் நீதிமன்றத்தில் இன்று பகிர்ந்து கொண்டார். அப்போது, மாநில அரசின் வழக்கறிஞர் பி. முத்துக்குமார், கோயிலின் நிர்வாகி அதிகாரி ஆகியோர் நீதிமன்றத்தில் இருந்துள்ளனர். 


விசாரணையின்போது கோயில் நிர்வாகத்தை எதிர்த்து தொடர் கேள்விகளை எழுப்பிய அவர், "இதுபோன்ற முறைகேடுகள் நடந்தால் பக்தர்கள் புகார் தெரிவிக்கும் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் கொண்ட அறிவிப்பு பலகைகள் ஏன் இல்லை. 


இது தொடர்பாக புகார் அளிக்க, அதிகாரியின் தொலைபேசி எண்ணை பகிர்ந்து கொள்ள கோயில் ஊழியர்கள் மறுத்துவிட்டனர். என்னையும் எனது குடும்பத்தினரையும் மிரட்டும் வகையில் அவர்கள் சண்டையிட்டனர்.


முதலமைச்சர் கூட தனது எண்ணை மக்களுடன் பகிர்ந்து கொள்ள தயங்காதபோது, ​​​​இஓவின் தொலைபேசி எண்ணை அவர்கள் ஏன் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள் என என் மனைவி கேட்டதற்கு, முதலமைச்சர் பகிர்ந்து கொள்ளலாம் ஆனால் அவர் பகிர்ந்து கொள்ள மாட்டார் என ஊழியர் கூறினார்.


கோவில் ஊழியர்களிடம் கேள்வி கேட்டதற்காக அங்கிருந்து செல்ல விடாமல் என்னை தடுத்தனர். உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து என்னை அடையாளம் காணவில்லை என்றால், மற்றவர்களைப் போலவே என்னையும் கோவிலுக்கு வெளியே தள்ளியிருப்பார்கள்.


நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுடன், ஆண்டு வருமானம் 14 கோடி ரூபாய் உள்ள ஒரு கோவிலின் நிலை இப்படியென்றால், மற்ற கோவில்களில் என்ன நடக்கும் என்பதை நினைத்தால் நடுங்குகிறது.


இவ்வளவு பெரிய கோவிலின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரியை செயல் அதிகாரியாக நியமித்தது.


இத்தகைய சட்டவிரோத செயல்களைத் தடுப்பதற்கான ஒரு அமைப்பை அவர் ஏற்படுத்தத் தவறியதால், இந்த பிரச்னைக்கு நிர்வாக அதிகாரிக்கும் சமமான பொறுப்பு உள்ளது. எனவே, அவரும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.


தேவைப்பட்டால், மோசமாக நடந்து கொண்ட கோயில் ஊழியர்களை அடையாளம் காணவும் நான் தயங்க மாட்டேன். இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் இந்த விவகாரத்தில் தலையீட்டு கடும் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில் தானாக முன்வந்து விசாரணையை மேற்கொள்ள தவிர்க்கிறேன்" என்றார்.