செ...ன்…னை… ஊராடா இது.., மனுச இருப்பானா அந்த ஊருல.., எப்படி ப்ரோ அந்த ஊர்ல இருக்கீங்க.., இந்த மாதிரி ஊருல இருக்கறதுக்கு நம்ம சொந்த ஊரே பெட்டர் ப்ரோ என பலர் சொன்னது தான் இந்த கட்டுரையை எழுத தொடங்கும் போது முதலில் தோன்றிய அசிரிரீக்கள். ஆனால், உண்மையில் சென்னை அப்படியான ஊரா? சென்னைக்குள் இருக்கும் அன்னை முகம் தெரிந்தவர்கள் சென்னையைப் பற்றி இப்படி கூறுவார்களா? இப்படியானவர்களை எதிர் கொள்ளும் போது பொட்டில் அடிப்பது போல் நாம் நமது சென்னையினைப் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டாமா..?


சென்னை என்றால் பலருக்கு இன்றும் நினைவுக்கு வருவது, தலைமைச் செயலகம், மெரினா கடற்கரை, தலைவர்கள் சமாதி, கூவம் ஆறு, சென்னை சென்ட்ரல், வடசென்னை கால்பந்து, கானா பாடல், கோடம்பாக்க சினிமா பிரபலங்கள், சென்னை சூப்பர் கிங்ஸ், மெட்ரோ ரயில், கோயம்பேடு பேருந்து நிலையம் என சென்னையின் பல முகங்களில் ஒன்றை நினைவு கூறுவார்கள். இன்னும் ஒரு சிலர் சென்னை வெயில், டிசம்பர் மழை வெள்ளம் குறித்து பேசுவார்கள். என்னதான் இப்படி பல முகங்களைக் கொண்டு கொஞ்சமும் உறக்கமும் இல்லாமல் இயங்கி வரும் சென்னையின் உறங்கா விழிகள் பற்றி யாருக்கும் பெரிதாக தெரிவதில்லை, அதனை தெரிந்துகொள்ள அவர்கள் ஆர்வம் காட்டுவதும் இல்லை.


வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை, வணிகம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்தவர்களால் 1639ஆம் ஆகஸ்ட் 22ம் தேதி உருவாக்கப்பட்ட நாளில் இருந்து, சென்னையின் ஜீவ நதியான கூவம் நதிக்கரையில் அமர்ந்து இந்த கட்டுரையினை நான் எழுதிக்கொண்டு இருக்கும் இந்தக்கணம் வரையிலும் சென்னை உறங்கியதாக வரலாறே கிடையாது.  சென்னை தவழ்கிறது, சென்னை நடக்கிறது, சென்னை ஓடுகிறது அதுவும் வேகமாக, சென்னை பறக்கிறது. இப்படி எதோ ஒன்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டே இருக்கிறதே தவிர, சென்னை ஓய்வு எடுக்கிறது என்ற ஒரு வரலாறு கிடையவே கிடையாது.


தூங்கா நகரமாக சென்னை இருக்க முக்கிய காரணம், பல கனவுகளுடன் இருக்கும் இளைஞர்களின் கடைசிப் புகலிடமாக சென்னை இருப்பது தான். சென்னையின் பூர்வகுடிகள் அளித்திருக்கும், ”சென்னைக்குப் போனா பொழச்சுக்கலாம்” எனும் உத்வேக மொழி கேட்டவர்களில்,  ரயில், பேருந்து, விமானம் என அனைத்து வகை போக்குவரத்தின் வழியே கனவை, வாழ்க்கையை, குடும்பத்தின் எதிர்கால நலனை நெஞ்சில் சுமந்து கொண்டு ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் பேருக்கு மேல் வருகிறர்கள். இப்படி தன்னை நம்பி வருபவர்களை எல்லாம் உடனே மேலே தூக்கிவிடும் பழக்கம் சென்னைக்கு கிடையவே கிடையாது. முதலில் கொஞ்சம் சோதித்து பார்த்துவிட்டு, அதன் பின்னர் அவர்களை அப்படியே தன்னோடு சேர்த்து வைத்துக்கொண்டு அவர்களை ஆளாக்கி அழகு பார்க்கும் நகரம்.  சென்னை கற்பிக்கும் வாழ்க்கை பாடத்தின் முதல் அத்தியாயத்தை கடப்பது மட்டும் தான் கடினம், அதன் பின்னர் நம் கனவை நனவாக்கும் அனைத்து வேலைகளையும் நாம் செய்யும் போது, தட்டுத்தடுமாறி பரிதவிக்கும்போது, ’நான் இருக்கிறேன் கவலை படாதே’ எனச்சொல்லி பக்கபலமாக இருக்கும்.  சென்னையைப் பற்றி கேட்பவர்களிடத்தில்  இங்கிருக்கும் கட்டிடங்களும், சாலைகளும், பாலங்களும், கடற்கரையும் தான் சென்னை என சொல்வதற்கு சென்னை வாசியான நாம் தேவையில்லை, அதற்கு கூகுள் ஆண்டவர் போதுமே. கூகுளின் கண்களுக்கு அகப்படாமல், இந்த தூங்கா நகரத்தில் இப்போதும் எறும்பு போல் தன் கனவை துரத்திச் செல்லும் இங்கிருக்கும் மனிதர்களும் மக்களும் தான் சென்னை. அவர்கள் தான் இந்த சென்னையை அரும்பாடுபட்டு உருவாக்கியிருக்கிறார்கள். கொஞ்சமும் முகம் சுளிக்காமல் தூய்மை பணிகளை திறம்படச் செய்யும் தூய்மை பணியாளர்கள், காசி மேட்டில் இரவெல்லாம் கடலில் மீன் பிடிக்க, உயிரை பணயம் வைத்து அதிகாலை கரை திரும்பும் மீனவர்கள், பல்கலைக்கழக விடுதியில் விடிய விடிய தன் ஆராய்ச்சிக் கட்டுரையை தயார் செய்யும் ஆய்வு மாணவர்கள், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெரும் கனவோடு வந்திறங்கிய புதிய சென்னை வாசியை பத்திரமாக இறக்கிவிட்டு ”ஆல் த பெஸ்ட்” சொல்லும் நடத்துனர், விடிய விடிய உணவு டெலிவரி செய்ய இருசக்கர வாகனங்களை இயக்கும் கல்லூரி மாணவர்கள் என உழைக்கும் மக்களும் சேர்ந்தது தான் சென்னை.


மதராஸ் மாகாணத்தை ஆட்சி செய்யும் பொறுப்பிற்கு வந்த அன்றைய திமுகவின் முதல்வர் பேரறிஞர் அண்ணா, 1969ல் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்தார். ஆனாலும், சென்னை தொடர்ந்து மெட்ராஸ் என்றே அழைக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர், 1996 ஜூலை 17ம் தேதி, தமிழகத்தினை அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த மு. கருணாநிதி, மெட்ராஸ் எனும் பெயரினை சென்னை என மாற்றினார். அன்று முதல் இந்த தூங்கா நகரம், சென்னை என அழைக்கப்ட்டு வருகிறது. 1639ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்ட சென்னையின் வயது 383 ஆக இருந்தாலும், ”சென்னை டே” எனப்படும் சென்னை தினம் முதல் முதலில் கொண்டாடப்பட்ட தினம் 2004 ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதியில் இருந்துதான். அன்று முதல் இன்று வரை மிகவும் கோலாகலமாக இந்த சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.


தான் கட்டமைக்கப்பட்ட நாளான 1639, ஆகஸ்ட் 22 முதல் இன்று வரை சென்னை, எல்லோரையும் வாழவைத்த வண்ணமே இருக்கிறது. விசாலமான, ஆங்கிலேயே கட்டிடக்கலையுடன்  கட்டிடங்கள், வளமான உட்கட்டமைப்பில்  பிரிட்டிஷ் தன்னை அன்றைக்கு வலுப்படுத்திக் கொள்ள சென்னை கடற்கரை முக்கிய காரணம். அதேபோல், இந்திய துணைக் கண்டத்தின் சுதந்திரத்திற்குப் பின்னர், மதராஸ் மாகாணமாக இருந்து வந்த சென்னை, அதன் பின்னர் தன் சொந்த கரங்களை வலுப்படுத்த முழு முனைப்புடன் களமிறங்கியது. சென்னையை அன்னை எனச் சொல்ல காரணம், ஒரு அன்னை தன்னுடைய அருகில் இருக்கும் குழந்தையின் தேவைகளை பூர்த்தி செயவ்தோடு மட்டும் இல்லாமல், தொலைவில் இருக்கும் குழந்தைகளுக்காகவும் யோசித்து செயல்படும் குணத்தை இயல்பாக பெற்றிருப்பதை இயற்கை வழங்கியிருப்பதைப் போல சென்னையும் தன்னை மட்டும்  வலுப்படுத்திக்கொள்வதோடு, ஒட்டுமொத்த தமிழகத்தினையும் கட்டமைத்து, வலுப்படுத்தும் பணியினை செய்துவரக்கூடிய தலைமைச் செயலகத்தினையும் தன்னுள்ளே கொண்டிருக்கிறது. அதனை நிர்வகிக்ககூடியவர்கள் தமிழகம் முழுவதும் இருக்கிறார்கள். அதுமட்டுமா, மகன் மற்றும் மகள் படிப்புச் செலவுக்கு மாதாமாதம் பணம் அனுப்பிய பெற்றோர்களுக்கு,  இங்கு சம்பாதித்த பணத்தை அம்மாவின் அக்கவுண்ட்க்கோ, அப்பாவின் அக்கவுண்டுக்கோ மாதாமாதம் அனுப்பும் மகள்களும், மகன்களும் நிறைந்து காணப்படுகிறார்கள். இனி யாரேனும் சென்னை பற்றி கேட்டால், சென்னை என்பது வரைபடத்தில் எல்லைபடுத்தப்பட்ட சென்னை மட்டுமே கிடையாது, சென்னை என்பது ஒட்டுமொத்த தமிழ்நாடும் தான், அதாவது நீங்களும் நானும் தான் எனச் சொல்லி, சென்னை டே வாழ்த்துகளையும் செல்லிப் பழகுவோம். இதனை கூறும்போது, ஒரு பாடலின் வரிகள் நினைவுக்கு வருகிறது, ”நீ எந்த ஊரோட உயிரா இருந்தாலும், உன்ன சொந்தம் ஆக்கும் டா… அதுதான் இந்த ஊருடா”. லெட்ஸ் கோ அண்ட் ப்ளே த சாங், அண்ட் ஃபீல் த சென்னை….