செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகி வெளியாகியுள்ளது.


பிரம்மாண்டமாக நடைபெற்ற தொடக்க விழா






சென்னை அடுத்த மகாபலிபுரத்தில் 44ஆவது செஸ் போட்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 28ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.


தொடக்க விழாவில் பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். வெளிநாட்டவரையும் கவரும் வகையில் மிக பிரம்மாண்ட ஏற்பாடுகள் இவ்விழாவில் செய்யப்பட்டிருந்தன. தொடக்க விழாவில், மத்திய மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோருடன், இயக்குனர் விக்னேஷ் சிவன், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், வைரமுத்து, கார்த்தி, உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களும் அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.


இன்று மாலை நிறைவு விழா


தொடர்ந்து கடந்த 12 நாள்களாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்றுடன் இவ்விழா நிறைவடைகிறது. இதன் நிறைவு விழா இன்று (ஆக.09)  மாலை 6 மணிக்குத் தொடங்கி நடைபெற உள்ள நிலையில், தொடக்க விழாவைப் போலவே கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


இவ்விழாவின் அழைப்பிதழில் இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கலந்துகொள்வார் என முன்னதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.


தோனி பங்கேற்கவில்லை!


இந்நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் தோனி விழாவில் பங்கேற்கப்போவதில்லை என முன்னதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றைய அரசு விளம்பரங்களில் தோனி பெயர் இடம்பெறாத நிலையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.


 






இன்று மாலை நடைபெறும் நிறைவு விழாவில் தமிழர்கள் மற்றும் இந்தியாவை சேர்த்த பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை கடந்த 10 நாள்களாக நடந்து வந்தது. அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் கண்கவர் நிகழ்ச்சியாக நிறைவு விழா நிகழ்ச்சி அமையும் என்று விழாக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.


இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். உலக செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், அமைச்சர்கள் மையநாதன் உள்ளிட்டோரும் இவ்விழாவில் பங்கேற்கின்றனர்.

இதுபோக வெளிநாட்டு வீரர்கள் மற்றும் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் நேரு விளையாட்டரங்கில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.