தமிழகத்தின் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்க லயன் சஃபாரியில் இருந்து 'மாயமானதாக' கருதப்பட்ட ஆண் சிங்கம் குறித்து பூங்கா நிர்வாகம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

வண்டலூர் உயிரியல் பூங்கா லயன் சபாரி

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நாள்தோறும் சுமார் 2500 பார்வையாளர்களையும், விடுமுறை நாட்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களையும், ஈர்க்கும் வண்டலூர் பூங்காவில், கல்வி சுற்றுலாவிற்காகப் பள்ளி மாணவர்களும் அதிகம் வந்து செல்கின்றனர்.

இந்தப் பூங்காவில் உள்ள விலங்குகளை, நேரடியாக அவற்றின் காடுகளுக்குச் சென்று பார்க்கும் வகையில், மான் மற்றும் லயன் சஃபாரி வசதிகள் உள்ளன. பாதுகாப்பு வசதியுடன் கூடிய வாகனங்களில் பார்வையாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டு, சிங்கம் மற்றும் மான்களைப் பார்வையிடலாம். இந்த லயன் சஃபாரிக்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது.

Continues below advertisement

புதிதாக விடப்பட்ட ஆண் சிங்கம் கூண்டுக்குத் திரும்பாதது ஏன்?

லயன் சஃபாரியில் மொத்தமாக ஒன்பது சிங்கங்கள் உள்ளன. இதில் ஏழு சிங்கங்கள் (மூன்று ஆண், நான்கு பெண்) பார்வையாளர்களுக்கு இயற்கை அனுபவத்தை மிக நெருக்கமாக வழங்க வடிவமைக்கப்பட்ட சஃபாரிப் பாதையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஏழு சிங்கங்களில், ஷேர்யார் என்ற ஐந்து வயது ஆண் சிங்கம், கடந்த 2023-ஆம் ஆண்டு பெங்களூரில் உள்ள பன்னேரஹட்டா உயிரினப் பூங்காவிலிருந்து விலங்கு பரிமாற்றத்தின் மூலம் வண்டலூர் பூங்காவிற்கு வந்தது. இந்தச் சிங்கம் அடிக்கடி சஃபாரிப் பகுதிக்குள் விடுவிக்கப்படுவது வழக்கம். 2025 அக்டோபர் 3-ஆம் தேதி, ஷேர்யார் சிங்கம் வழக்கம் போல் சஃபாரிப் பகுதிக்குள் விடப்பட்டது. 

பொதுவாக, மாலை நேரமானதும் சிங்கங்கள் தானாகவே கூண்டுக்குத் திரும்பி விடுவது வழக்கம். ஆனால், ஷேர்யார் சிங்கம் இரவு ஆகியும் கூண்டிற்குத் திரும்பாததால் பூங்கா ஊழியர்கள் முதலில் சற்று அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, உடனடியாக வனவிலங்கு மேலாண்மை அதிகாரிகள், சிங்கத்தைத் தேடுவதற்காகப் பிரத்யேகக் குழுக்களை அமைத்தனர். அக்டோபர் 4-ஆம் தேதி தேடுதல் குழுவினர், சிங்கம் லயன் சஃபாரிப் பகுதிக்குள்ளேயே இருப்பதை உறுதி செய்தனர்.

சிங்கம் வெளிப்புறப் பகுதிக்குச் செல்லாமல் இருக்க வலுவான எல்லைச் சுவர் மற்றும் சங்கிலிச் சக்கரக் கூண்டு வேலிகள் ஆகியவற்றால் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். மேலும், ஷேர்யார் சிங்கத்தின் பாதச் சின்னங்கள் லயன் சஃபாரி எல்லைக்குள் பதிவாகி இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

தொடர்ந்து ஐந்து தனி படைகள் அமைக்கப்பட்டு, சிங்கம் கண்காணிக்கப்பட்டு வந்தது. பகலில் ட்ரோன் மூலமாகவும், இரவு நேரத்தில் வெப்பப் படம் பிடிக்கும் (Thermal Imaging) ட்ரோன்கள் மூலமாகவும் சிங்கம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டது. அதன் நடமாட்டத்தைக் கண்காணிக்க 10 கேமராப் பிடி (Camera Trap) வசதிகளும் நிறுவப்பட்டன.

இருப்பிடம் திரும்பிய சிங்கம்

தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளுக்குப் பிறகு, லயன் சஃபாரிப் பகுதியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த ஷேர்யார் ஆண் சிங்கம் மீண்டும் அதன் இருப்பிடமான கூண்டுக்குத் திரும்பியது என்று வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், பார்வையாளர்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் நிலவிய குழப்பம் நீங்கி, நிலைமை தற்போது சீரடைந்துள்ளது.