சென்னை மக்களுக்குக் குட் நியூஸ் - தமிழக எல்லையை வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீர்; இனி தடையின்றி குடிநீர்
சென்னை குடிநீர் தேவைக்காக ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள கிருஷ்ணா நதி நீர் இரண்டு நாட்கள் காலதாமதமாக வந்தடைந்தது.

சென்னை குடிநீர் தேவைக்காக ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லையை வந்தடைந்தது. கடந்த இரு நாட்களுக்கு முன்பே வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காலதாமதமாக தமிழகம் வந்தடைந்தது.
சென்னையின் குடிநீர் தேவைக்காக தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஆந்திர அரசு ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீரும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும் என 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.
அந்த வகையில், ஆந்திர அரசு, சென்னை குடிநீருக்காக இந்த பருவத்திற்கு வழங்க வேண்டிய கிருஷ்ணா நீரை வழங்கவேண்டும் என தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள், ஆந்திர நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு வலியுறுத்தி இருந்தனர். இதனைத் தொடர்ந்து, சென்னை குடிநீருக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து, தெலுங்கு- கங்கை திட்ட கால்வாய் மூலம் கிருஷ்ணா நீர் விநாடிக்கு 1900 கன அடி திறக்கப்பட்டது.
152 கி.மீ.தூரம் பயணித்து தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டுக்கு கடந்த 25-ஆம் தேதி வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டு நாட்கள் காலதாமதமாக வந்தடைந்தது. விநாடிக்கு 50 கன அடியாக வரும் நிலையில், காலதாமத்திற்கு என்ன காரணம் என தெலுங்கு கங்கை கால்வாயில் தமிழக நீர்வளத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
தமிழக எல்லையை வந்தடைந்துள்ள கிருஷ்ணா நீர், 25 கி.மீ.,தூரம் பயணித்து இன்று இரவு பூண்டி ஏரியை சென்றடையும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Before You Go
BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
ட்ரெண்டிங் செய்திகள்





















