சென்னையின் புதிய அடையாளமாக மாறியிருப்பது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம். சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்காக புதியதாக அமைக்கப்பட்ட இந்த பேருந்து நிலையம் 2023ம் ஆண்டு அவசர கதியில் திறக்கப்பட்டது. 

கிளாம்பாக்கம் ரயில் நிலையம்:

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சகல வசதிகள் இருந்தாலும், சென்னையில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்வதற்கு முறையான மெட்ரோ வசதிகளும், மின்சார ரயில் வசதியும் இல்லாததால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதையடுத்து, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு நேரடியாக மெட்ரோ ரயில் நிலையமும், கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையமும் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. 

கடந்தாண்டு ஜனவரியில் கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் தொடங்கப்பட்டது. தீவிரமாக ரயில் நிலைய பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே மாதம் ரயில்நிலையம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர். ஜுன் மாதம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஜுன் மாதத்திலும் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறக்கப்படாத நிலையில், வரும் ஜுலை மாதத்தில் ரயில் நிலையம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தாமதத்திற்கு காரணம் தமிழக அரசா?

கிளாம்பாக்கம் ரயில் நிலைய திறப்பு தாமதத்திற்கு தமிழக அரசே காரணம் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, ரயில்வே துறை அதிகாரிகள் கூறியிருப்பதற்கு கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் 80 சதவீதம் முடிந்துள்ளது. 2வது நடைமேடை பணிகளும் விரைவில் முடிந்துவிடும். 

மாநில அரசு ஆகாய நடைபாதையை ரயில் நிலையத்துடன் இணைத்தால் மட்டுமே ரயில் நிலைய திறப்பு சாத்தியம் ஆகும். அந்த பணிகள் ஜுலை மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று மாநில அரசு கூறியிருக்கிறது. இதனால், ஜுலை மாதத்திற்குள் ரயில் நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நாங்கள் தயாராக உள்ளோம் என்று தெரிவித்துள்ளனர். 

என்ன சிக்கல்?

வண்டலூர் - ஊரப்பாக்கம் இடையே புதிய ரயில் நிலையமாக அமைந்து வரும் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் 2 நடைமேடைகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இதில் ஒரு நடைமேடையின் இருபுறத்தில் இருந்து ரயில்களில் ஏறவும், இறங்கவும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் நடந்து வருகிறது. 

ரயில் நிலையத்தில் இருந்து பயணிகளை சாலையில் இணைக்கும் அணுகு சாலைகள், ஆகாய நடைபாதை ஆகியவையும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த ஆகாய நடைபாதைக்காக நிலம் கையகப்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இருந்தது. இதன் காரணமாக, ஆகாய நடைபாதை அமைப்பதிலும் தமிழக அரசுக்கு சிக்கல் இருந்தது. 

காரணம் என்ன?

இதையடுத்து, ஆகாய நடைபாதை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகும் தமிழக அரசு அதற்கான பணிகளில் தொய்வாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனாலே, கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பதும் தள்ளிப்போவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ரயில்வே அதிகாரிகளே தற்போது ஆகாய நடைபாதையை தமிழக அரசு அமைத்து கொடுத்தால் விரைவில் கிளாம்பாக்கம் திறக்கலாம் என்று கூறியிருப்பதால், அந்த பணிகளை தமிழக அரசு விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.