kilambakkam new bus terminus  - கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

 

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை கடந்த டிசம்பர் 30ஆம் தேதி தமிழக முதல்வர் திறந்து வைத்தார். முதல் கட்டமாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, திருச்சி, கோவை ஈரோடு, சேலம் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 



 

தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழக பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ளே வந்து பயணிகளை ஏற்றி செல்கின்றனர். மேலும் இங்கிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு மாநகரப் பேருந்துகள் மூலமாக இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்று வருகின்றன. 

 

சர்வீஸ் சாலை

 

இந்தநிலையில், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து வெளியேறும் பேருந்துகள் ஜிஎஸ்டி சாலையின் சர்வீஸ் சாலையில் இயக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலை வழியாக பல்வேறு ஊர்களுக்கு செல்கின்றன. பேருந்துகள் இயக்கப்படும் சர்வீஸ் சாலையில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு சென்றுவர இந்த சர்வீஸ் சாலையையே பயன்படுத்தி வந்தனர். 

 



 

பேருந்துகளை சிறை பிடித்து 

 

இதனிடையே பேருந்துகள் சர்வீஸ் சாலையில் இயக்கப்பட்டு வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேருந்துகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தென் மாவட்டங்களில் இருந்து வந்த பொதுமக்கள் சென்னைக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். சம்பவ இடத்தில் கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

 




கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் உள்ள வசதிகள்:



  • 6.40 லட்சம் சதுர அடியில் 2 அடித்தளங்கள், தரைதளம், முதல்தளத்துடன் இந்த பேருந்து நிலையம் அமைந்துள்ளது.

  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் 3,500 மாநகர பேருந்துகள் வந்து செல்ல, மேற்கூரையுடன் கூடிய நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

  • ஒரே நேரத்தில் 130 அரசுபேருந்துகள், 85 தனியார் பேருந்துகளை நிறுத்த முடியும்.

  • 28.25 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம், கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன

  • கண் பார்வையற்றவர்களும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் பிரெய்லி பலகைகள் வைக்கப்படுகின்றன.

  • கியூஆர் கோடு டிக்கெட்டுகள் வழங்கப்படும். 

  • 2 அடித்தளங்களில் 340 கார்கள், 2,800 இருசக்கர வாகனங்கள் நிறுத்தமுடியும்

  • இங்கு பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை, ஏடிஎம் மையங்கள், காவல் கட்டுப்பாட்டு அறைகள், போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளிட்டவை உள்ளன.

  • தனியாக காவல் நிலையமும் அமைக்கப்பட்டு வருகிறது.

  • முக்கியமாக புயல் வெள்ளக் காலங்களில் மழை நீர் தேங்காமல் வெள்ள நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது

  • ஊரப்பாக்கம் ரயில் நிலையம் கிளாம்பாக்கத்திலிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது

  • விமான நிலையம்- கிளாம்பாக்கம் வரை சென்னை மெட்ரோவை நீட்டிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

  • 2025 இல் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலும் குறையும்.

  • ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தை அடையும் வகையில் நடைமேம்பாலம் எனப்படும் ஸ்கைவாக் அமைக்கப்படுகிறது.