கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ( kilambakkam new bus terminus )


 

Continues below advertisement


சென்னையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து, பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும் அதிகரிக்கும் மக்கள் தொகை கருத்தில் கொண்டும் சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய, கிளாம்பாக்கம் பகுதியில்  சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு  பயன்பாட்டிற்கு வந்துள்ளது



கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ( kilambakkam new bus terminus )


 


நடைமுறை சிக்கல்கள்


புதியதாக ஒரு பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டால்,  இருக்கக்கூடிய நடைமுறை சிக்கல்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சற்று அதிகமாகவே இருந்தது. காரணம் சென்னை புறநகர் பகுதியில் இந்த பேருந்து நிலையம் அமையப்பெற்றதால் சென்னை உள்பகுதிகளிலும், வட சென்னை பகுதிகளில் இருக்கும் பொது மக்களும்  பேருந்து நிலையத்தை பயன்படுத்துவதற்கு சிரமம் ஏற்பட்டது. இதன் காரணமாக பயணிகள் பல்வேறு இடையூறுகள் மற்றும் இன்னல்களுக்கு ஆளானார்கள்.




அதேபோன்று முறையான இணைப்பு பேருந்துகள் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன.  அதே போன்று பேருந்து நிலையத்தில் பல அடிப்படை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டும்  இருந்த வண்ணம் இருந்தது.  இந்தநிலையில் மக்களின் கருத்துகள் அடிப்படையில்,  தீர்வுகள் காணப்பட்டு வருகின்றன.


ஏ.டி.எம் பிரச்சனை


ஆரம்பத்திலிருந்து கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஏடிஎம் இல்லாதது மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது.   தமிழ்நாட்டில் கிராமங்களில் கூட யு.பி.ஐ மூலமாக, பணத்தை செலவு செய்வது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் வெளியில் செல்லும்போது  பணம் கொண்டு செல்வது கிடையாது. பேருந்து பயணங்கள் உள்ளிட்ட சிலவற்றுக்கு மட்டுமே, பணம் தேவைப்படுவதால்,கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஏடிஎம் இல்லாதது பெரிய பிரச்சினையாக இருந்து வந்தது.




 இதனைத் தொடர்ந்து தற்காலிக நடமாடும் ஏடிஎம் வைக்கப்பட்டது.  இந்தநிலையில் தற்பொழுது ஏடிஎம் வைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு ஐந்து ஏடிஎம்கள் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  ஆனால் அவற்றில் தற்பொழுது ஒரு ஏடிஎம் எந்திரம் மட்டுமே  பொருத்தப்பட்டு முழுமையான மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.    


பொதுமக்கள் கடும் அவதி


கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஒரு ஏடிஎம் மட்டும் இருப்பதால்,    எப்பொழுதும் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணிகள் பணத்தை எடுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.  அதிக அளவு பொதுமக்கள் பயணம் செய்யக்கூடிய வார இறுதி நாட்களில்,  ஏடிஎம்மில் நீண்ட வரிசையில் காத்திருப்பவர்கள் எண்ணிக்கை   அதிகமாக காணப்படுகிறது.  எனவே, ஏற்கனவே முடிவு செய்தது போல் 5 ஏ.டி.எம் களும் உடனடியாக பயன்பாட்டிற்கு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.




சில சமயங்களில் இது போன்று ஏடிஎம்மில் பணம் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொழுது,  தங்கள் ஊருக்கு செல்ல வேண்டிய பேருந்துகளை   தவறவிடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே  இதுகுறித்து சென்னை பெருநகராட்சி வளர்ச்சி குழுமம் உடனடியாக தலையிட்டு,  அடுத்த சில நாட்களில் அனைத்து ஏடிஎம்களும்  செயல்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பது  பயணிகள் மற்றும்   மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது