பாஜக ஆதரவாளர் கார்த்தி கோபிநாத் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது - காவல்துறை
கோயில் திருப்பணி என்ற பெயரில் மிலாப் செயலி மூலம் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை 33 லட்சத்து 28 ஆயிரத்து 924 ரூபாய் கார்த்தி கோபிநாத் வசூலித்து உள்ளார்.
Continues below advertisement

சென்னை உயர் நீதிமன்றம்
கோயில் திருப்பணிகளுக்காக பணம் வசூலிக்க கூடாது என சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் செயல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியதையும் மீறி கார்த்தி கோபிநாத் பணம் வசூலித்து முறைகேடு செய்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்களுக்காக முறைகேடாக பணம் வசூலித்து, அதை கோவில் பணிகளுக்கு பயன்படுத்தாமல் வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தி மோசடி செய்ததாக பாஜக ஆதரவாளரும், யூ டியூபருமான கார்த்திக் கோபிநாத்துக்கு எதிராக கோவில் செயல் அலுவலர் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில் ஆவடி குற்றப்பிரிவால் கடந்த மே 29ம் தேதி கைது செய்யப்பட்ட கார்த்திக் கோபிநாத், ஜாமீனில் வெளிவந்துள்ளார். தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்துறை சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், கோயில் திருப்பணி என்ற பெயரில் மிலாப் செயலி மூலம் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை 33 லட்சத்து 28 ஆயிரத்து 924 ரூபாய் கார்த்தி கோபிநாத் வசூலித்து உள்ளதாகவும், அதிலிருந்து சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை வேறு கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவில் திருப்பணிக்களுக்காக தனி நபர் நன்கொடை வசூலிக்கக் கூடாது எனவும், அவ்வாறு வசூலித்து இருந்தால் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டுமென கோவில் செயல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியும் கார்த்திக் கோபிநாத் பணம் வசூலித்து உள்ளதாகவும், வெளிநாடுகளில் இருந்தும் பணம் வசூலித்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதால் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் மீறப்பட்டுள்ளது குறித்தும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகவும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கின் விசாரணை ஆரம்பகட்ட நிலையிலேயே உள்ளதால் கார்த்தி கோபிநாத் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என காவல்துறை பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வழக்கை இறுதி விசாரணைக்காக வரும் வியாழக்கிழமைக்கு (ஜூலை 21) நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Continues below advertisement
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.