ஸ்ரீபெரும்புதூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நான்கு பசுமாடுகள் உயிரிழந்தன. இறந்து போன பசுவின் கன்று குட்டி தாய் பசுவை சுற்றி வந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

காஞ்சிபுரம் ( Kanchipuram News ) காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாட்டு மாடுகளை வளர்ப்பவர்கள் அதனை கொட்டகை அமைத்து பராமரிக்காமல் சாலைகளில் விட்டு விடுகின்றனர்.  இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் செல்கின்றன.  இந்த சாலையில் அமர்ந்து கொண்டும் , திடீர் திடீர் என பசுமாடுகள் சாலையை கடப்பதும் வாகன ஓட்டிகளிடையே சிரமத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.



 

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடகால் அருகே சாலையில் கூடி இருந்த பசுமாடுகள் மீது அடையாளம் தெரியாத கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நான்கு பசுமாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. அதனைத் தொடர்ந்து உயிரிழந்த நான்கு பசு மாடுகளில் ஒரு பசு மாட்டின் கன்று இறந்து போன தன் தாய் பசுவை சுற்றி சுற்றி வந்து முகர்ந்து பார்த்து அம்மா அம்மா என்று அழைத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நெடுஞ்சாலைகளில்  இது போன்ற சம்பவங்கள் பலமுறை நடந்தும் கூட மாவட்ட நிர்வாகமோ, மாடு வளர்ப்பவர்களோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

 


 தொடரும் சம்பவங்கள்


காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதுமே பல்வேறு இடங்களில் சாலைகளில் மாடுகள்வ்திரிவது தொடர்கதை  ஆகியுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகத்தினர், அவ்வப்பொழுது சிறு சிறு நடவடிக்கைகள் மட்டுமே எடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.   மாடுகள் சாலையில் சுற்றி திரிவதால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கின்றது. குறிப்பாக வாகன ஓட்டிகளை மாடுகள் அச்சுறுத்துவதால் வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.


ஒருபுறம் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைந்தாலும் மறுபுறம் மாடுகளும் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகின்றன. அவ்வப்பொழுது ஏற்படும் சாலை விபத்துகளில் மாடுகள் உயிரிழக்கும் சம்பவமும் அடிக்கடி நிகழ்கின்றன. இன்று நடைபெற்ற சம்பவத்தில் கூட நான்கு மாடுகள் உயிரிழந்த, வாயில்லா ஜீவனான மற்றொரு கன்று குட்டி, பாதிப்படைந்துள்ளது. எனவே மாடு வளர்ப்போர் சாலைகளில் மாட்டை விடாமல் இருப்பதும், அவ்வாறு விடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது தான் இதற்கு ஒரே வழி என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.