செங்கல்பட்டு மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் 2450 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு விழா நடத்தப்படவுள்ளது. முதற்கட்டமாக காட்டாங்கொளத்தூர் வட்டாரத்தைச் சார்ந்த 350 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா இன்றைய தினம் கூடுவாஞ்சேரியில் நடத்தப்படுகிறது.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டத்தில் 1266 குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்களில் 6 மாதம் முதல் 6 வயது வரை 55391 குழந்தைகள், 8878 கர்ப்பிணி தாய்மார்கள், 6909 பாலூட்டும் தாய்மார்கள் பதிவு செய்யப்பட்டு இணை உணவு வழங்கப்படுகின்றது. 2 முதல் 5 வயது வரை உள்ள 24,186 குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியுடன் மதிய உணவு (ம) 3 நாட்களுக்கு முட்டை வழங்கப்படுகிறது. பிறந்தது முதல் 6 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் மாதாமாதம் எடை (ம) உயரம் எடுத்து அவர்களின் ஊட்டச்சத்து நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் மையத்தில் பயனாளிகள் கர்ப்பிணி தாய்மார்கள் நலனை வலியுறுத்தும் வகையில் வருடம் தோறும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா அரசு மூலம் நடத்தப்படுகிறது.
கர்ப்பம் என்று தெரிந்தவுடன் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையம் மற்றும் குழந்தைகள் மையத்தில் பதிவு செய்து கொண்டு, குழந்தைகள் மையத்தில் வழங்கும் இணை உணவு பெற்றுக் கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் 10 கிலோ எடை அதிகரிக்க வேண்டும். இரும்பு சத்து, போலிக் அமிலம் (ம) சுண்ணாம்பு சத்து மாத்திரைகள் தவறாமல் உட்கொள்ளுதல் வேண்டும். பிறக்கும் குழந்தை 2.5 கிலோ எடையுடன் பிறக்கும், தாய் இரத்த சோகையால் பாதிக்கப் படாமல் இருக்கும் தினமும் சரிவிகித சத்தான உணவு (ம) இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும்.
குழந்தை பிறந்த ½மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு 6 மாதகாலம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். 7 மாதம் முதல் தாய்ப்பாலுடன் இணை உணவு வழங்க வேண்டும். கர்ப்பகால மற்றும் பாலூட்டும் காலத்தில் தாய் நல்ல மனநிலையில் இருக்க வேண்டும். இதற்கு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க வாழ்த்துக்கள். மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள் பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் சூட்ட வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் தெரிவித்தார்.