தமிழகத்தின் மின் தேவையை அனல், நீர், காற்று மற்றும் அணு மின்சாரம் பூர்த்தி செய்கின்றன. காற்றாலைகள் மூலம் சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத மின்சாரம் கிடைக்கிறது. காற்று வீச்சினால் ஏற்படக்கூடிய ஆற்றலைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் பொறி அமைக்கப்பட்டு, காற்று விசைச் சுற்றுக் கலன்களில் இருந்து பெறப்படும் இயந்திர ஆற்றல், மின் ஆற்றலாக மாற்றப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது. இதில் இருக்கும் நீளமான இறக்கைகள் காற்றின் வேகத்தால் சுற்றுவதால், அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஜெனரேட்டர் இயங்குவதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
காற்றாலை
தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிக காற்றாலைகள் உள்ளன. மே மாதம் முதல் செப்டம்பர் வரை காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், அதிக அளவு காற்றாலை மின்சாரம் உற்பத்தியாகும். தற்போது தமிழகத்தில் , பல நிறுவனங்கள் விண்ட்மில் அமைத்து வருகின்றனர். சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளை சத்திரம் அருகே சர்வீஸ் சாலையில் 40 வீல்கள் கொண்ட 70 அடி நீளமுள்ள மூன்று (பெரிய லாரி) ட்ரக்குகளில் காற்றாலைகள் இறக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தது.
சுமார் 120 அடி நீளம் கொண்ட 10 டன் எடையுள்ள காற்றாலை இறக்கையுடன் கூடிய, 1.8 மெகா வாட் திறனுடைய காற்றாலை மின் உற்பத்தி ஜெனரேட்டரை பூந்தமல்லியில் உள்ள நிறுவனத்திடம் வாங்கி என்.டி.சி குரூப் ஆப் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் லாரிகளில், எடுத்து செல்லப்படுகிறது. பூந்தமல்லியில் ஆர்.ஆர்.பி., எரிசக்தி நிறுவனம் மற்றும் வெஸ்டாஸ் நிறுவனம் வடிவமைத்த காற்றாலைகளை அந்த நிறுவனத்தின் அதிகாரிகளின் மேற்பார்வையில் கர்நாடக மாநிலத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டது.
ஒன்றன்பின் ஒன்றாக
நேற்று இரவு பிள்ளை சத்திரம் பகுதியில் சூறாவளி காற்று வீசியதால் சர்வீஸ் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரக்குகள் காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் காற்றாலை இறக்கைகளுடன் சுமார் 7 அடி பள்ளத்தில் ஒன்றன்பின் ஒன்றாக மூன்று லாரிகள் ஏரியில் சாய்ந்தது. அதிக எடையுள்ள இந்த காற்றாலைகள் சரிந்து அதன் மீது லாரி கவிழ்ந்ததால், காற்றாலைகளில் அதிக சேதம் ஏற்பட்டது. இதை மூடி மறைத்து நுகர்வோருக்கு தெரியாமல் இதை சரி கட்ட அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் முயற்சித்தனர்.
செய்தியாளரின் செல்போனை பிடுங்கி
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு நேரில் சென்ற முன்னணி தொலைக்காட்சியின் செய்தியாளர் ஒருவர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது, லார்ஜிசிஸ்ட் நிறுவனத்தின் ஊழியர்களும் காற்றாலை உற்பத்தி செய்த நிறுவனத்தின், அதிகாரிகளும் செய்தியாளரின் செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டு அவர் எடுத்த அனைத்து வீடியோக்களையும் டெலிட் செய்து விட்டு அவரை மடக்கி உட்கார வைத்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதைக் கேள்விப்பட்டு சம்பவ இடத்துக்கு சக செய்தியாளர்கள் சென்றபோது அவர்களையும் மிரட்டும் துணியில் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் அச்சுறுத்தினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் கவனத்திற்க்கு இந்த பிரச்சினையை கொண்டு சென்ற போது சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி வெங்கடேசன், சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளர் கார்த்திக், தாலுகா காவல் ஆய்வாளர் பேசி பிரேம் ஆனந்த் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நேரில் வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மிரட்டல் விடுத்த ஊழியர்களை மன்னிப்பு கேட்க வைத்ததன் பெயரில், இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.
செய்தியாளர்கள் வீடியோ எடுக்கும் போது லாரிகளில் இருந்த நம்பர் பிளேட்டுகளையும் எழுத்துக்களையும் கருப்பு மையை போட்டு மறைத்தனர். இதை பார்க்கும் போது, அவர்கள் விதி மீறி செயல்பட்டார்களா? என விசாரணை நடைபெற்று வருவதாக பெயர் சொல்ல விரும்பாத ஒரு காவல் அதிகாரி தெரிவித்தார். மிகப்பெரிய லாரிகளுடன் காற்றாலைகள் ஏரியில் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.