Kallakurichi Student Death Case: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கு - பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு ஜாமீன்
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
Continues below advertisement

சென்னை உயர்நீதிமன்றம்
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
Continues below advertisement
கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் அந்தப் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கர் மற்றும் இரண்டு ஆசிரியைகளுக்கு ஜாமீன் வழங்கி உத்தவிடப்பட்டுள்ளது.
வழக்கின் பின்னணி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஜூலை 13ம் தேதி மரணம் அடைந்தது குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்ன சேலம் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை ஜூலை 17ஆம் தேதி கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. பின்னர் சந்தேக மரணம் என்ற முதல் தகவல் அறிக்கையை திருத்தி மாணவி மரணத்திற்கு காரணமாக இருந்ததாக வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கைதான 5 பேரும் ஜாமீன் கோரிய மனுக்கள் விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, 5 பேரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இதையடுத்து ஜாமீன் கோரி பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி,வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 4 பேர் ஜாமீன் கோரி மனுக்கள் இன்று நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் மாணவியின் வலது பக்கத்தில் மட்டுமே காயம் உள்ளதாக முதல் பிரேத பரிசோதனை அறிக்கை கூறுவதாவும், நன்றாக படிக்குமாறு மட்டுமே ஆசிரியர்கள் கூறியதாகவும், மரணத்தில் எந்த பங்கும் தங்களுக்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
சிபிசிஐடி காவல்துறை தரப்பில், பள்ளியில் விடுதி அனுமதியின்றி நடத்தியது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், நன்றாக படிக்குமாறு அவர்கள் அழுத்தம் கொடுத்ததாக கூறி, உயிரிழந்த மாணவி எழுதியதாக கூறப்படும் தற்கொலை குறித்த கடிதம் வாசித்து காண்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முகாந்திரம் இருப்பதாலேயே ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மாணவியின் மரணம் பள்ளி வளாகத்தில் நடந்துள்ளதால், தீவிரமான வழக்கு என்றும், அதனால் மனுதாரர்கள் தான் பொறுப்பு என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவம் அந்த பள்ளியில் ஏற்கனவே இரண்டு முறை நிகழ்ந்துள்ளன என்றும், கொலை வழக்கு ஒன்றில் தாளாளர் ரவிக்குமார் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதி, தீவிரமானது என்றால் ஏன் உடனடியாக கைது செய்யவில்லை என்றும், பெற்றோருக்கு உள்ள சந்தேகப்படி பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரம் ஏதும் உள்ளதா? என காவல்துறை தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு விளக்கம் அளித்த காவல்துறை தரப்பு முதல் மற்றும் இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்தது.
மாணவியின் பெற்றோர் தரப்பில் குறுக்கிட்டு, பள்ளி தாளாளரின் மகன்களிடம் இன்று வரை விசாரணை நடத்தப்படவில்லை எனவும், இரு பிரேத பரிசோதனை அறிக்கைகளுக்கும் வேறுபாடுகள் உள்ளதாகவும், உடல் முழுவதும் காயங்கள் உள்ளதாகவும், சில இடங்களில் கைரேகைகள் பதிவாகி உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தற்கொலை கடிதம் போலியானது என்றும், தங்களது மகள் எழுதியது என்றும் கூறி, இந்த மரணத்தில் மாவட்ட ஆட்சியர், காவல் ஆய்வாளர் உள்ளிட்டோரும் உடந்தையாக உள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
சிபிசிஐடி தரப்பில் குறிக்கிட்டு மாணவியின் மரணம் கொலை என தெரிந்தால், நிச்சயமாக கொலை வழக்கு பதிவு செய்யப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி இளந்திரையன், மனுதாரர்கள் 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அப்போது முதல்வர் சிவசங்கர் ஜாமீன் கோரிய மனு தாக்கல் செய்துள்ளதாகவும் அது மனு விசாரணைக்கு இன்று பட்டியலிடப்படவில்லை என அவரின் வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து அவருக்கும் ஜாமீன் வழங்குவதாக நீதிபதி உத்தரவிட்டார். அப்போது சிபிசிஐடி காவல்துறை சார்பில் ஜாமீன் நிபந்தனைகள் கடுமையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி அனைத்து மனுகள் மீதும் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.