ஹாங்காங்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக, சென்னை வந்த பயணிகள் விமானத்தில், ரூ.1.7 கோடி மதிப்புடைய, மிக மிக விலை உயர்ந்த, 2  கைக்கடிகாரங்கள் கடத்தி வந்த, இந்திய பயணியை, சுங்கத்துறை அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில் கைது செய்து மேலும் விசாரணை.


சுங்க அதிகாரிகள் விசாரணை:


சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நள்ளிரவில் வந்தது. அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது இந்திய ஆண் பயணி ஒருவர், சுற்றுலா பயணியாக ஹாங்காங் சென்றிருந்தவர், ஹாங்காங்கிலிருந்து, சிங்கப்பூர் வழியாக, இந்த விமானத்தில் சென்னைக்கு வந்திருந்தார்.


அந்தப் பயணி மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதை அடுத்து சுங்க அதிகாரிகள் அந்த பயணியை வெளியில் விடாமல், சுங்க அலுவலகத்திற்கு அழைத்து சென்று, அவருடைய உடமைகளை முழுமையாக பரிசோதித்தனர்.


நவீன கைக்கடிகாரங்கள்:


அவருடைய உடைமைக்குள்  விலை உயர்ந்த, நவீன ரக கை கடிகாரங்கள் 2 இருந்தன. இந்த கைக்கடிகாரங்கள் இந்தியாவில் எங்குமே கிடையாது. மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் மட்டுமே உபயோகப்படுத்தக் கூடியது.
பேட்டிக் பிலிப்ஸ் 5740, பெர்கெட் 2759 ஆகிய ரகங்களைச் சேர்ந்தவை. இந்த லக்ஷ்சரி கைக்கடிகாரங்கள் இந்தியாவில் எந்த ஷோரூம்களிலும் கிடைக்காது. இந்த இரு கைக்கடிகாரங்களின் மதிப்பு ரூ.1.7 கோடி. இதை அடுத்து சுங்க அதிகாரிகள், அந்தப் பயணியை வெளியில் விடாமல் அறையில் அடைத்து வைத்தனர். அதோடு அவரிடம் சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.


அப்போது அந்தப் பயணி, ஹாங்காங் நாட்டிலிருந்து, சிங்கப்பூர் வழியாக சென்னை வருவதற்காக, ஹாங்காங் விமான  நிலையத்தில் நின்ற போது, இரண்டு பேர் வந்து, இந்த கைக்கடிகாரங்கள் இருந்த பார்சலை, என்னிடம் தந்து, இதில் இரண்டு கைக்கடிகாரங்கள் உள்ளன. இதை நீங்கள் சென்னைக்கு எடுத்துச் செல்லுங்கள். சென்னை விமான நிலையத்தில் எங்களுடைய நண்பர்கள் இருவர் உங்களை சந்தித்து, இந்த கைக்கடிகாரங்களை வாங்கிக் கொண்டு, உங்களுக்கு அன்பளிப்பாக பணம் தருவார்கள் என்று கூறினார். அதோடு என்னை அவர்களுடைய செல்போனில் போட்டோ எடுத்துக் கொண்டனர். இந்த போட்டோவை சென்னையில் உள்ள எங்கள் நண்பருக்கு அனுப்பி விடுவோம். அவர் உங்களை சென்னை விமான நிலையத்தில் அடையாளம் கண்டு கொள்வார் என்று கூறினர். 


அதை நம்பி நான் பணத்துக்கு ஆசைப்பட்டு வாங்கி வந்தேன். இதில் இவ்வளவு விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் இருக்கும் என்று எனக்குத் தெரியாது என்று கூறினார். ஆனாலும் சுங்க அதிகாரிகள், அந்த 2 கைக்கடிகாரங்களை பறிமுதல் செய்ததோடு, கடத்தி வந்த இந்திய பயணியை கைது செய்தனர். மேலும் அந்தப் பயணியின் செல்போன் பதிவுகள், போன்றவைகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த அளவு அதிக விலை உயர்ந்த லக்ஷ்ரி கைக்கடிகாரங்களை யாருக்காக இவர் கடத்தி வந்தார் என்று தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.