விழுப்புரம் மாம்பலம்பட்டு சாலையில் உள்ள கடந்த வாரம் திருமண மண்டபத்தில் நெடுஞ்சாலைத் துறையில், பணியாற்றும் பொன்குமார் என்பவரது, இல்லத் திருமணம் கடந்த 20-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்க வருகை தந்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியை வரவேற்பதற்காக வழிநெடுகிலும் பேனர்களும், திமுக கொடிகளும் கட்டும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இதே கொடி கம்பம் நடும் பணியில் விழுப்புரம் ரஹூம் லே அவுட் பகுதியை சேர்ந்த ஏகாம்பரம் என்பவரது இளைய மகனான 13 வயதே ஆன, 8-ஆம் வகுப்பு படிக்கும் தினேஷ் என்ற சிறுவனும் சட்ட விரோதமாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளான்.
மின் பகிர்மான கழகத்தின் அருகே கொடி கம்பம் நட்டபோது, கொடி கம்பத்தின் இரும்பு கம்பியானது உயர் அழுத்த மின் கம்பியில் பட்டு, அதன்மூலம் சிறுவன் தினேஷ் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின், திமுகவின் விழாவின்போது விதிகளை மீறி கொடி கட்டுதல் பேனர் வைத்தல் கூடாது என அறிவுறுத்தி இருந்துள்ளார்.
தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் முடிந்த சில நாட்களிலேயே, அதைப்பற்றி சற்றும் கவலைப்படாமல் காஞ்சிபுரத்தில் அதிமுக கட்சி உறுப்பினர் திருமண விழாவிற்கு முன்னாள் அமைச்சர்கள் வருவதையொட்டி அவர்களை வரவேற்கும் விதமாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருக்கக்கூடிய காவலன் கேட் பகுதியில் சுமார் 500 மீட்டர் தொலைவில் சாலையின் ஒரு பகுதியில் எந்த அனுமதியும் இல்லாமல் கட்சிக்கொடி நடப்பட்டுள்ளது. இந்த கட்சிக்கொடிகளின் மேற்பகுதி மின்சார வயரில் பின்னிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் மின்சார கம்பியில் பின்னிக் கொண்டிருக்கும் கட்சிக்கொடியினால் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட துறை கட்சிக்கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் அனுமதி இல்லாமல் அதிமுகவினர் கொடி நட்டு இருப்பதை அறிந்த, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆபத்தான முறையில் நடப்பட்டிருந்த அதிமுக கட்சி கொடி கம்பத்தை அப்பகுதியிலிருந்து அகற்றினர்.
கட்சி கொடி, பேனர் ஆகியவற்றால் அடிக்கடி இதுபோன்ற உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெற்றாலும், அதில் இருந்து கட்சியினர் பாடத்தைக் கற்றுக்கொள்ளாமல் மீண்டும் மீண்டும், அதே தவறை செய்து வருவது தொடர்கதையாகியுள்ளது.
மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X