அலட்சியம் வேண்டாம்
வாழ்நாள் லட்சியமாக சொந்தமாக வீடு வாங்கி விட்டோம், அதில் குடியேறி விட்டோம் என்று பலரும் அமைதியாக இருந்து விடுகின்றனர். குறிப்பாக, புதிய வீட்டுக்கான பணியின் போது தரம் தொடர்பான பல்வேறு விஷயங்களை பார்ப்பவர்கள் கூட பணி முடிந்த நிலையில் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர்.
கான்கிரீட் அடிப்படையில் கட்டப்படும் கட்டடங்களை பயன்படுத்தும் போது, முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். பராமரிப்பில் சிறு குறைபாடு இருந்தாலும் அந்த கட்டடம் நாளடைவில் பல்வேறு பாதிப்புகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.
இன்றைய சூழலில் பராமரிப்பில் ஏற்படும் சிறு குறைபாடுகள் கூட கான்கிரீட் கட்டடங்களில் பெறிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உரிமையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு, என்னென்ன விஷயங்களில் கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
கட்டட பராமரிப்பில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் ;
1. கட்டடத்தின் மேல் தளத்தில் தரை பகுதியில் நீர்க்கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதா என்பதை ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதித்து சரி செய்ய வேண்டும். இதில் கைப்பிடி சுவர், தளம் ஆகியவற்றில் விரிசல் போன்ற பாதிப்புகள் தெரிய வந்தால் உரிய நபர்களை அழைத்து உடனடியாக சரி செய்ய வேண்டும்.
2. உங்கள் வீட்டு கட்டடத்தின் வெளிப்புறத்தில் ஈரம் ஏதாவது இடத்தில் தங்கும் நிலை ஏற்பட்டால், பறவைகளின் எச்சம் வாயிலாக விதை விழுந்து செடி வளர வாய்ப்புள்ளது. சுவர்களில் உயரமான பகுதியில் காணப்படும் சிறிய செடிகளை பின் எடுக்கலாம் என்று அலட்சியமாக இருந்தால் அது கட்டடத்தை கடுமையாக பாதித்து விடும்.
எனவே கட்டடத்தின் வெளிப் புறத்தில் இது போன்ற செடிகள் முளைப்பது தெரிந்தால், ஆரம்பத்திலேயே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இது வளர வளர பாதிப்பு வளர்கிறது என்பதை உரிமையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
3. பெரும்பாலான மக்கள் கட்டடத்தின் உட்புறத்தில் குறைந்த இடைவெளியில் புதிய வண்ணம் அடிக்க நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால், கட்டடத்தின் வெளிப்புற சுவர்களில் வண்ணம் அடிப்பதற்கு அதிக கால இடைவெளி எடுத்து கொள்வதும் கட்டடத்துக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது.
எனவே, குறைந்தபட்சம், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது கட்டடத்தின் வெளிப்புற சுவர்களில் வண்ணம் அடிக்க வேண்டும். இதற்கான பணியின் போது சுவரில் காணப்படும் மெல்லிய விரிசல்களை பட்டி பார்ப்பது முறையில் சரி செய்ய வேண்டும்.
4. உங்கள் வீட்டுக்கான கட்டடத்தில் மின்சார ஒயரிங், பிளம்பிங் இணைப்புக்கான அமைப்புகளை ஆண்டுக்கு ஒரு முறை சரி பார்க்க வேண்டும். இதில் ஏதாவது குறைபாடுகள் இருப்பது தெரிய வந்தால் அதை உரிய நபர்கள் வாயிலாக உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்.