இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.
இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர். ரயில் செல்லும் பயணிகளுக்கு ஏற்றவாறு குறிப்பாக விடுமுறை தினங்கள், திருவிழாக்கால நேரங்களில் ரயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.
இந்த நிலையில், சேலம் வழியாக இயக்கப்படும் சென்னை டு கோவை எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் பரிசோதனை அடிப்படையில் இனி சென்னை அருகில் உள்ள திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரலில் காலை 6.10 மணிக்கு புறப்படும். சென்னை சென்டரல்-கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-12675) திருவள்ளூருக்கு காலை 6.43 மணிக்கு வந்தடையும்.
அதன்பிறகு இங்கிருந்து 6.45 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம், வாலாஜாபேட்டை, காட்பாடி, ஆம்பூர், சேலம் வழியாக கோவைக்கு மதியம் 2.05 மணிக்கு சென்றடையும். இதனால் அரக்கோணம், வாலாஜா சாலை, காட்பாடி மற்றும் ஆம்பூர் ரயில் நிலையங்களில் இந்த ரயில் வந்து செல்லும் நேரங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அரக்கோணத்திற்கு காலை 7.03 மணிக்கு வரும் இந்த ரயில் 7.08 மணிக்கு வந்து 7.10 மணிக்கு புறப்படும். அதேபோல், வாலாஜாபேட்டை ரயில் நிலையத்திற்கு காலை 7.35 மணிக்கும், காட்பாடி ரயில் நிலையத்திற்கு 8.03 மணிக்கும், ஆம்பூர் ரயில் நிலையத்திற்கு 8.43 மணிக்கும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் வந்து செல்லும் என சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
