தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில்  நேற்று இரவு முதல் சில பகுதிகளில் விட்டு, விட்டு மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் இன்று 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மதியம் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, இதே போல் அரியலூர், பெரம்பலூர், கோவை, நீலகிரி, திருப்பூர், கரூர், தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

ஆகஸ்ட் மாதத்திற்கான மழைப் பொழிவு தமிழகத்தில் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதன்படி, எப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி  மற்றும் கோவை மாவட்டங்களில் பருவமழை அதிகமாக பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில்  பருவமழை தீவிரமாக இருந்தது. குறிப்பாக வட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காரைக்காலில் 11 செ.மீ, மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டில் 10 செ.மீ, பெரம்பலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் தலா 9 செ.மீ அளவுக்கும் மழை பதிவாகியுள்ளது. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை என பல மாவட்டங்களில் மழையின் அளவு பதிவாகியுள்ளது.

Continues below advertisement

வெப்பநிலை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 36.5 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சமாக கரூர் பரமத்தியில் 21.0 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும், நாளை மறுநாள் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.இந்த நிலையில் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாளை ஆகஸ்ட் 13ஆம் தேதி திருவள்ளூர், ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.