தமிழகத்திலே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டமாக, மாநிலத் தலைநகரான சென்னை உள்ளது. சென்னையில் மட்டும் தினசரி 6 ஆயிரம் நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் குடும்பங்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற சென்னை மாநகராட்சி சார்பில் முன்கள தன்னார்வலர்கள் பலர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.


பொதுமக்கள் நலன் கருதி சென்னை மாநகராட்சி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஒரு சிலர் மற்றும் அவர்களது குடும்பத்தார் வீடுகளை விட்டு வெளியே வருவதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன.




தொற்று பாதித்த நபர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் வெளியே நடமாடுவது கண்டறியப்பட்டால் அவர்களிடம் இருந்து, முதன்முறை ரூபாய் 2 ஆயிரம் அபராதம் வசூலிக்கவும், அதனையும் மீறி மீண்டும் வீடுகளை விட்டு வெளியே வரும் நபர்களை சென்னை மாநகராட்சியால் நடத்தப்படும் கொரோனா பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, புகார்கள் இருப்பின் சென்னை மாநகராட்சிக்கு 044-2534520 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கும்படி ஏற்கனவே கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், இதுதொடர்பாக பெறப்பட்ட 12 புகார்கள் மீது வருவாய்த்துறை அலுவலர்கள் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 6 புகார்களில் விதிமீறல் இல்லை எனவும், ஒரு நோயாளி உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.




”மீதமுள்ள 5 நபர்களிடம் இருந்து தலா ரூபாய் 2 ஆயிரம் வீதம் ரூபாய் 10 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டு, அவர்கள் இனி வெளியே வரக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், இனி வெளியே வந்தால் கொரோனா பாதுகாப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலின் தீவிரத்தை உணர்ந்து பொதுமக்கள் சென்னை மாநகராட்சிக்கு தங்களது முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக ககன்தீப் சிங் பேடி பொறுப்பு ஏற்றுக்கொண்டது முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு மண்டலத்திற்கும் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றும் அமைக்கப்பட்டு, அக்குழுக்கள் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரம் என்ற அளவில் பதிவாகிவரும் நிலையில், இதுவரை கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதிகம் உயிரிழந்தவர்கள் பட்டியலில் சென்னை முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.