தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கோடிக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். மக்கள் தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப சென்னையில் கட்டிடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பழைய கட்டிடங்களும் இடிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. சில கட்டிடங்கள் அகற்றப்பட்டு வருகிறது. 


சென்னையில் அதுபோன்று உருவாகும் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம். இதற்கான விளக்கத்தை சென்னை மாநகராட்சி அளித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, 


கட்டுமான கழிவுகள்:


"சென்னையில் தினசரி 1000 மெட்ரிக் டன் கட்டுமான கழிவுகள் உருவாகி வருகிறது. இதைச் சமாளிக்க  நகரத்தோட வட மற்றும் தென்பகுதியில் மணிக்கு 100 டன் திறன் கொண்ட இரண்டு கழிவு செயலாக்கத் தொழிற்சாலைகள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் நிறுவப்பட்டுள்ளது.


நகரத்தோட தொழில்மயமாக்கல் ரியல் எஸ்டேட் வளர்ச்சி காரணமாக கட்டிட வேலைகளும், பழைய கட்டிட இடிப்பு வேலைகளும் பெரியளவில் நடந்து வருகிறது. அதே நேரத்தில் கற்கள், செங்கல், மணல் போன்ற கட்டுமானப் பொருட்களுக்கு அதிக தேவைகள் இருக்கிறது. இதுபோன்ற பொருட்கள் இயற்கை வளங்கள் மூலமாக பெறப்படுவதால் மறுசுழற்சி அவசியமாகிறது. 


மறுசுழற்சி செய்வது எப்படி?


நவீன கனிமங்களை கையாளும் கிரஷர்கள் உள்ளிட்ட இயந்திரங்களின் உதவியுடன் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 600 மில்லி மீட்டர் வரையிலான கட்டுமான கழிவுகள் இரண்டு கட்டமாக உடைக்கப்பட்டு, 25 மில்லி மீட்டர் மற்றும் அதற்கும் குறைவான ஜல்லி மற்றும் மணலாக மாற்றப்படுகிறது. 


காந்தம் மூலமாக இரும்பு போன்ற பொருட்கள் பிரிக்கப்படுகிறது. பின்னர், பி்ளாஸ்டிக், மரம் போன்ற குறைந்த எடை கொண்ட கழிவுகள் பிரிக்கப்படுகிறது. சிறிய அளவு உடைக்கப்பட்ட கற்கள் தரமான மணல் தயாரிக்க மேலோட்டமாக பொடியாக்கப்படுகிறது. இந்த மாதிரி பெறக்கூடிய மணல் மற்றும் பொடிப்பொருட்கள் கழுவப்பட்டு சொரசொரப்பான மற்றும் மென்மையான மணலாக பிரிக்கப்படும். 


ஜல்லி, மணல் பொருட்கள்:


75 மைக்ரானுக்கும் குறைவான மண் ஹைட்ரோசைக்ளின் பிரிக்கப்பட்டு குறைவான எடைகொண்ட செங்கல் போன்ற வேலைக்கு பயன்படும் பொருட்களாக மாற்றப்படுகிறது. ரெடிமிக்ஸ் கான்கிரீட் தயாரிக்கவும் இது பயன்படுகிறது. கட்டிட கழிவுகள் செயலாக்கத் தொழிற்சாலைகளில் இருந்து தயாரிக்கப்படும் ஜல்லி மற்றும் மணல் பொருட்கள் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தால் ஐஐடி மெட்ராஸ் தரச்சான்றிதழ் பெறப்பட்டிருக்கிறது."


இவ்வாறு அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.