அதிமுக உட்கட்சி தேர்தல் வழக்கு: முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி மனு தள்ளுபடி

அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து முன்னாள் எம்.பி. கே. சி. பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Continues below advertisement

அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Continues below advertisement

கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி நடைபெற்ற அதிமுக உட்கட்சி தேர்தலில்  ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கபட்டனர்.

இந்த தேர்தலை ரத்து செய்யக் கோரி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கே.சி பழனிசாமி தொடர்ந்த வழக்கு நீதிபதி சிவி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஆஜரான இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர்  உட்கட்சி விவகாரம் குறித்து வழக்கு தொடர முடியாது என்பதால் கே.சி.பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார். 

இதற்கு பதிலளித்த கே.சி.பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், தம்மை நீக்கப்பட்டது குறித்து தமக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கவில்லை என்பதால் தமது நீக்கம் செல்லாது என கூறினார்.

இந்த மனு எப்படி விசாரணைக்கு உகந்தது என கேள்வி எழுப்பிய நீதிபதி இந்த விவகாரம் தொடர்பாக வேறு நீதிமன்றத்தில் மனு நிலுவையில் உள்ளதா? என கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த கே.சி.பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், தமது நீக்கத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்  நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் அதிமுக உட்கட்சி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் கூறினார். 

இதனையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி, உட்கட்சி தேர்தலை எதிர்த்து கே.சி.பழனிசாமி மனுத்தாக்கல் செய்ய அவருக்கு தகுதியில்லை என்பதால் அவரது மனுவை தள்ளுபடி செய்வதாக கூறினார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை அந்தந்த நீதிமன்றங்கள் விசாரித்து முடிவெடுக்கலாம் என நீதிபதி சி.வி. கார்த்திகேயன் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்

 

Continues below advertisement
Sponsored Links by Taboola