சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே லோக்மான்ய திலக் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பை நோக்கி சென்ற அந்த விரைவு ரயிலில் இருந்து திடீரென புகை வந்ததால் பாதி வழியிலேயே நிறுத்தம். ரயில் இன்ஜினின் முன்பகுதியிலேயே புகை வந்ததை கண்ட, ஓட்டுனர் ரயிலை நிறுத்தியதாக கூறப்படுகிறது. ரயிலின் ஏசி பெட்டியில் தீப்பற்றி இருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நேர்ந்தது எப்படி?
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மும்பைக்கு இன்று மாலை சரியாக 6:20 மணி அளவில் புறப்பட்ட லோக்மான்ய திலக் அதிவிரைவு வண்டி பேஸின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தை கடந்த நிலையில் வியாசர்பாடி ராமலிங்கம் கோவில் அருகே செல்லும் போது ரயில் புறப்பட்ட 20 நிமிடங்களுக்குள் விபத்திற்கு உள்ளானது.
சிறிது நேரத்திற்கு எல்லாம் தீ கொழுந்துவிட்டு எரிய, அந்த பகுதி புகை மண்டலமாக மாறியுள்ளது. இதனால் ரயிலில் இருந்த பயணிகள் அலறியடித்தவாறு அதிலிருந்து கீழே இறங்கி ஓடியுள்ளனர். அதோடு, அருகில் நின்றுகொண்டிருந்த மறுமார்கத்தில் சென்ற ரயிலிலும், உயிருக்கு அஞ்சி தஞ்சம் புகுந்தனர். இதனால், அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தீயை அணைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதனிடையே, இன்ஜின் மற்றும் ரயில் பெட்டி இணைப்புப் பகுதியில் உள்ள மின் வடகம்பியில் ஏற்பட்ட மின்கசிவால் விபத்து என தகவல் வெளியாகியுள்ளது.
ரயில்வேதுறை விளக்கம்:
இதனிடையே, விபத்து தொடர்பாக ரயில்வேதுறை விளக்கம் அளித்துள்ளது. அதில், ”சம்பவத்தின் மூலம் தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை. HOG கப்ளரில் ஏற்பட்ட பிரச்னையால் புகை வெளியேறியது. அந்த பிரச்னை உடனடியாக அணுகப்பட்டு புகை கட்டுப்படுத்தப்பட்டது. அதைதொடர்ந்து, ரயில் தனது பயணத்தை மேற்கொண்டது” என தென்னக ரயில்வே விளக்கமளித்துள்ளது.
அச்சத்தில் மக்கள்:
அண்மையில் ஒடிசாவில் 3 ரயில்கள் மோதி நேர்ந்த விபத்தில், 290-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். கடந்த சில தசாப்தங்களில் நேர்ந்த மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக அந்த விபத்து கருதப்படுகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் உதவித்தொகை அறிவித்தன. உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த விபத்தால் நேர்ந்த அச்சமே பொதுமக்களிடையே இன்னும் ஒழியவில்லை. இந்த நிலையில், அடுத்தடுத்து ஏற்படும் ரயில் விபத்துகள் பொதுமக்களிடையே ரயில் பயணம் தொடர்பான அச்சத்தை மேலும் அதிகரிக்கிறது. எனவே, ரயில் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்ற தேவையான உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இதனிடையே ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கூடுதல் நேரம் ஊழியர்கள் பணியாற்ற கட்டாயப்படுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும், பாதுகாப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.