78 இடங்களில் சுங்கச்சாவடிகள்
தமிழகத்தில் 6,600 கி.மீ.,க்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு , அண்டை மாநிலங்களுடன் இணைக்கப்பட்டு இச்சாலைகள் வழியே தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இவற்றுக்கு கட்டணம் வசூலிக்க 78 இடங்களில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதே போல நெடுஞ்சாலை துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் வண்டலுார் வாயிலாக மீஞ்சூர் வெளி இடையேயான வட்ட சாலை அக்கரை மாமல்லபுரம் இடையேயான கிழக்கு கடற்கரை சாலை போன்றவை பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மிண்ணனு கருவி வாயிலாக சுங்கக்கட்டணம்
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க வாகனங்கள் தேங்காமல் இருக்க, ரொக்கக் கட்டணம் செலுத்துவதை தவிர்க்கப்பட்டு , மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் பாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட்டது. வாகன உரிமையாளர்கள் , இந்த பாஸ்டேக்கில் முன்னரே குறிப்பிட்ட அளவு தொகையை செலுத்தியிருக்க வேண்டும். குறிப்பிட்ட வாகனங்கள் சுங்கச் சாவடியை கடக்கும் போது , அங்குள்ள கண்காணிப்பு கேமரா , மின்னணு கருவி வாயிலாக , சுங்க கட்டணம் கழித்து கொள்ளப்படும். அதன் விபரம், வாகன உரிமையாளர்கள் மொபைல் போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
வருடாந்திர பாஸ்டாக் ஏற்பதில்லை
இந்நிலையில், 3,000 ரூபாய் கட்டணம் செலுத்தி ஓராண்டு அல்லது 200 முறை சுங்கச் சாவடிகளை பயன்படுத்தி கொள்ளும் புதிய திட்டத்தை , தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிமுகம் செய்தது. தமிழகத்தில் ஏராளமான வாகன உரிமையாளர்கள், 3,000 ரூபாய் கட்டணம் செலுத்தி , இந்த வருடாந்திர பாஸ்டேக் பாஸ் முறையில் இணைந்துள்ளனர். அவர்களின் வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் போது , ஓராண்டுக்கு , 200 முறை என்ற அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. இதில் பிரச்னையில்லை.
ஆனால் , சென்னை வெளிவட்ட சாலை , கிழக்கு கடற்கரை சாலைகளில் இந்த வாகனங்கள் செல்லும் போது , அங்குள்ள சுங்கச் சாவடிகளில் இந்த, 3,000 ரூபாய் வருடாந்திர பாஸ் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அதற்கு மாறாக, வழக்கமான பாஸ்டேக்கில் டிபாசிட் செய்யப்பட்டுள்ள பணத்திலிருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பழைய பாஸ்டேக்கில் பணம் இல்லையெனில், 3,000 ரூபாய் செலுத்தி பெற்ற பாஸ் இருந்தும் இரு மடங்கு பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் வாகன ஓட்டிகள், சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
இதனால் தற்போது இரு விதமான பாஸ்டேக் கணக்குகளை பராமரிக்க வேண்டிய நிலைக்கு வாகன ஓட்டிகள் தள்ளப்பட்டு உள்ளனர். இப்பிரச்னைக்கு மாநில அரசு தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில் ;
தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன சுங்கச்சாவடிகளில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை தீர்ப்பதற்கான பரிந்துரைகள், மாநில நெடுஞ்சாலை செயலர் செல்வராஜ் வாயிலாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. இதற்கென தனி திட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது என்றார்.