தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் 5 ஏரிகளில், முழு கொள்ளளவில் இருந்து 3 அடிக்கு குறைவாக நீர் இருப்பு வைக்கவும், 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கவும் நீர்வளத்துறை சார்பில் பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் மிக முக்கியமாக நீராதாரங்களாக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம்,
  தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கம் உள்ளிட்டவை விளங்குகிறது. இந்த ஏரிகள் வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கும் நீரை மட்டுமே நம்பியுள்ளது. கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையால் மேற்கண்ட ஏரிகளில் நீர் இருப்பு உயர்ந்த நிலையில், கடந்த செப்டம்பர் முதல் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், ஏரிகளின் நீர் மட்டம் மேலும் உயர்ந்து வருகிறது.





 

இதனால், 21 அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 19.69 அடியாகவும், 18.86 அடி கொள்ளவு கொண்ட சோழவரம் ஏரியில் 14.53 அடியாகவும், 24 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 21.05 அடியாகவும், 35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 32.97 அடியாகவும், 35.61 அடி கொள்ளளவு கொண்ட கண்ணன் கோட்டை - தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தில் 35 அடியாகவும் நீர் இருப்பு உள்ளது. இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், மேற்கண்ட ஏரிகளின் நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது.  



 

எனவே இந்த 5 ஏரிகளில் முழு கொள்ளளவில் இருந்து 3 அடிக்கு குறைவாக நீர் இருப்பை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அப்போது தான் திடீரென ஏரிக்கு நீர் வரத்து இருந்தாலும், உபரி நீராக வெளியேற்ற முடியும். எனவே, ஏரிகளின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்க நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.




 


மேலும், இந்த ஏரிகளை கண்காணிக்க சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முரளிதரன், கண்காணிப்பு பொறியாளர் முத்தையா ஆகியோர் தலைமையிலான பொறியாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு சார்பில் மேற்கண்ட ஏரிகளின் நீர் இருப்பை 24 மணி நேரம் கண்காணிக்கவும்  அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவில் மழை பெய்து வருவதால் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X