சென்னை விமான நிலையப் பகுதியில் திடீர் பனிமூட்டம் காரணமாக, சென்னையில் விமானங்கள் தரையிறங்க முடியாமல், பெங்களூரு, கோவை திரும்பி சென்றன.





சென்னை புறநகர் பகுதியான சென்னை விமான நிலையப் பகுதியில், இன்று காலை ஏழு மணிக்கு மேல் திடீரென மூடுபனி ஏற்பட்டது. இதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.




கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிலிருந்து 248 பயணிகளுடன் சென்னைக்கு, இன்று காலை 7 மணிக்கு வந்து கொண்டு இருந்த கத்தார் ஏர்லைன்ஸ் விமானம், சென்னையில் தரை இறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி  அனுப்பப்பட்டது. அதைப்போல் கோவையில் இருந்து 92 பயணிகளுடன் இன்று காலை 7.30 மணிக்கு சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், சென்னையில் தரையிறங்க முடியாமல் மீண்டும் கோவைக்கே  திரும்பி சென்றது. அதோடு மும்பை, கொல்கத்தா, பெங்களூர் ஆகிய விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் தொடர்ந்து வட்டமடித்துக் கொண்டு இருக்கின்றன.




அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய பெங்களூர், ராஜமுந்திரி, கொல்கத்தா, டெல்லி ஆகிய விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன.


பனிமூட்டம் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவே இந்த விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. இன்னும் சிறிது நேரத்தில் வானிலை சீரடைந்து விடும் அதன் பின்பு வழக்கம்போல் விமான சேவைகள் நடக்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.