இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயலானது தற்போது தமிழக கடற்கரை பகுதியை நெருங்கியுள்ளது, இதனால் பலத்த காற்று மற்றும் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சென்னையில் இன்று 54 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
டிட்வா புயல்:
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மிதமான முதல் கனமழை வரை கொட்டித்தீர்த்து வருகிறது. இப்படியான நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு ஏமன் நாடு பரிந்துரை செய்த டிட்வா பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த புயலானது சென்னைக்கு தென் கிழக்கே 400 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருக்கிறது. இந்த புயலால் இலங்கை நாடு முழுவதும் கனமழை, வெள்ளப்பெருக்கால் சின்னாபின்னமாகியுள்ளது. இதன் தாக்கம் இராமேஸ்வரம், பாம்பன் தீவுகளிலும் எதிரொலித்தது. கடல் சீற்றம், 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
விமானங்கள் ரத்து:
இந்த சூழ்நிலையில் சென்னை விமான நிலையத்திலும் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டிட்வா புயல் காற்றுடன் கூடிய கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், இன்று மட்டும் மொத்தம் 54 விமான சேவைகள் ரத்துசெய்யப்பட்டதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் பல உள்நாட்டு, நகரங்களுக்கு இடையிலான விமானங்களே அதிக அளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம், பெங்களூர், ஹைதராபாத் மற்றும் இலங்கையின் யாழ்ப்பாணம் நோக்கி செல்ல இருந்த சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் இரவு வரை இயக்கப்படவிருந்த இந்த விமானங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இந்த சேவைகள் பெரும்பாலும் ஏடிஆர் வகையைச் சேர்ந்த சிறிய ரக விமானங்கள் என்பதால், சூறைக்காற்று மற்றும் கனமழை போன்ற மோசமான வானிலை நிலைமைகளில் இவ்வகை விமானங்களை இயக்குவது மிகுந்த ஆபத்தானதாகும். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் பயணிகள் தாங்கள் முன்பதிவு செய்துள்ள விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு சேவைகள் பற்றிய புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெற்றுக் கொண்டு, அதன்படி தங்கள் பயணத் திட்டங்களை மாற்றிக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.