நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால், மழை காலங்களில், பெரும் சேதம் ஏற்படுகிறது. பொதுமக்கள் பாதிப்படைவதுடன், உடமைகளை இழந்து தவிக்கும் நிலை ஏற்படுகிறது. இதைதொடர்ந்து, தமிழகத்தில், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் மீட்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், அதிகாரிகள் அனைத்து நீர் நிலைகளையும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வேளையில், காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான  சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் குளம் புறம்போக்கு இடம் உள்ளது.

 



 

இந்த குளத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த பிரபல குற்றவாளி படப்பை குணாவால் ஆக்கிரமித்து, குளத்தை மூடி விவசாய நிலமாக பயிர் செய்வது தெரிந்தது. இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் வருவாய் துறையினர்,  மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, குளம் ஆக்கிரமிக்கப்பட்டது உறுதியானது. இதையடுத்து, 3 பொக்லைன் இயந்திரங்கள் மூலம், சமன் செய்யப்பட்டு நிலமாக இருந்த பகுதியை மீண்டும் குளமாக மாற்றும் பணியைத் தொடங்கினர். பிரபல ரவுடியாக வலம் வந்து தற்போது தலைமறைவாக உள்ள படப்பை குணாவின் ஆக்கிரமிப்பு இடத்தை அதிகாரிகள் கைப்பற்றி இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 

படப்பை குணா 

 

எங்கெல்லாம் தொழில் நிறுவனங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் ரவுடிகளும் உருவாகிறார்கள். சின்ன ரவுடிகளாக இருக்கும் அவர்கள் தொழில் நிறுவனங்களை மிரட்டி மாமூல் வாங்கி, பெரிய காசை பார்த்தவுடன் பத்து பேரை கூட்டு சேர்த்துக்கொண்டு பெரிய தாதாக்களாக மாறிவிடுகின்றனர் அப்படியான ஒருவர் தான் படப்பை குணா. இவர் படப்பை, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள தொழில் நிறுவனங்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் தன்னுடைய சாம்ராஜ்யத்தை நிறுவியுள்ளார். தனக்கு கீழ் செயல்படும் கிளை ரவுடிகளைக் கொண்டு மிரட்டி அங்குள்ள தொழில் நிறுவனங்களில் பெரும் பணத்தை சுருட்டி வந்தார். கட்டப்பஞ்சாயத்து, அடிதடியிலும் ஈடுபட்டு வந்தார். இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனாலும் இவருடைய கொட்டம் அடங்கியபாடில்லை.

 



 

வெள்ளதுரை என்ட்ரி

 

இதற்கு முடிவுகட்ட நிறுவனங்கள் ஒன்றுசேர்ந்து அரசிடம் முறையிட்டன. படப்பை குணாவின் ரவுடியிசத்துக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் இல்லையென்றால், நாங்கள் தொழில் செய்ய முடியாது என அழாத குறையாக மன்றாட, காவல் துறையை களமிறக்கியது அரசு. அதன் ஒருபகுதியாக தான் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரையை காவல் துறை தலைமை வரவழைத்தது. அவர் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைத்து படப்பை குணா, அவருடைய ஆதரவாளர்கள் என பலரையும் கைதுசெய்யும் டாஸ்க் வெள்ளத்துரையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து படப்பை குணா தலைமறைவானார்.

 

படப்பை குணாவின் மனைவி கைது

 

அவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில், குணாவின் மனைவி எல்லம்மாளை வெள்ளத்துரை தலைமையிலான தனிப்படை கைது செய்தது. தலைமறைவாகியுள்ள குணாவை என்கவுண்டர் செய்ய காவல் துறை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உடனே சென்னை உயர் நீதிமன்றத்தில் எல்லம்மாள் வழக்கு தொடர்ந்தார். தன்னுடைய கணவரை என்கவுண்டர் செய்ய காவல் துறை திட்டமிட்டிருப்பதாக முறையிட்டார். ஆனால் காவல் துறை மறுக்கவே அவரின் மனுவை தள்ளுபடி செய்தது. இச்சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  40 காவல்துறையினர் இடமாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்.



 

தொடரும் வேட்டை

 

படப்பை குணா வெளி மாநிலங்களில் இருக்கும் ரவுடிகளின் உதவியுடன் தலைமறைவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் காவல்துறையினர் வெளிமாநிலங்களில் முகாமிட்டு படைப்பை குணாவை கைது செய்ய முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக காஞ்சிபுரம் நகர் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த பொய்யாகுளம் தியாகு என்ற ரவுடியை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். தியாகு மீது சுமார் 63 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.