செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே கூவத்தூர் அடுத்த வேப்பஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர்  மாற்றுத்திறனாளியான நாகராஜ் (35). கூவத்தூர் இ.சி.ஆர். பகுதியில் விவசாயம் மற்றும் 2 பண்ணை வீடுகளை பராமரித்து வரும் காவலாளியாக பணியாற்றி வந்த அவர், கடந்த மே 18-ந் தேதி தனது இரு சக்கர வாகனத்தில் சென்ற போது  கூவத்தூர் சோதனை சாவடி மையத்தில் போலீசார் வாகன சோதனை செய்தபோது, மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்ததாக நாகராஜின் ஸ்கூட்டியை பறிமுதல் செய்த போலீசார் அவரை கூவத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்து  சென்று கேலியும், கிண்டலும் செய்ததாக கூறப்படுகிறது.



 

பதிலுக்கு நாகராஜூம் கள் குடித்து வந்த தம்மை, மது குடித்து வந்ததாக பொய்யாக சித்தரித்ததால் ஆத்திரமடைந்த அவர் போலீசாரை ஒருமையில் பேசி திட்டியதால், கூவத்தூர் போலீசார் 5 பேர்  அவரை கடுமையாக தாக்கி காலை உடைத்ததாக சொல்லப்பட்டது. பிறகு மாற்றுதிறனாளி சங்கத்தினர் தமிழக டி.ஜி.பி. மற்றும் செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.யிடம் கொடுத்த புகாரின் பேரில் தலைமை காவலர் ராஜசேகர் மற்றும் காவலர் அருண் ஆகிய இருவரும் காஞ்சிபுரம் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். 



 

இந்நிலையில் கடந்த மே 20-ந் தேதி செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் எலும்பு முறிவு ஏற்பட்ட அவரது காலுக்கு அறுவை சிகிக்சை செய்யப்பட்டது. இந்நிலையில் 6 மாதங்களாகியும் கால் சரியாக குணமாகாததால் வாக்கர் உதவியுடன்தான் அவர் நடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். தற்போது வாழ்வாதாரம் இன்றி, வேலைக்கு செல்ல முடியாமலும் பரிதவித்து வருகிறார். தனக்கு உயர்தர சிகிச்சை கிடைக்க கருணை உள்ளத்தோடு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.



 

இதுகுறித்து நாகராஜ் நம்மிடம் பேசியதாவது: மாற்றுத்திறனாளி சங்கம் சார்பாக பல இடங்களில்,  சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளோம். காவலர்கள் எனது காலை உடைத்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நான்  விவசாயம் செய்து கொண்டும், சிறு சிறு வேலைகளை செய்து கொண்டும் கௌரவமாக வசித்து வந்தேன். தற்பொழுது என்னுடைய காலை உடைத்ததால் ஆறு மாத காலமாக எந்தவித பணிக்கும்  செல்லாமல் உள்ளேன். எனது மனைவி மாற்றுத்திறனாளி உதவித்தொகை மற்றும் பிறர் செய்யும் உதவிகள் தான் எனது ஆறு மாத வாழ்க்கை செல்கிறது. அரசு தனக்கு உதவி செய்ய வேண்டும் மற்றும் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.



 

கடந்த மே மாதங்களில் நாகராஜின் காமெடி கலந்த பேச்சு, அவரது பாவனையை பலரும் ரசித்து, நாகராஜிக்கு ஒருபுறம் ஆதரவாகவும், மறுபுறம் அவரை விமர்சனம் செய்தும், அதேபோல் போலீசாரின் மனித உரிமை மீறலை கண்டித்தும் பல்வேறு கருத்துக்களை நெட்டிசன்கள் பதிவிட்டனர். ஆனால் அந்த பேச்சுக்கள் எல்லாம் மாறி காமெடியனாக பார்க்கப்பட்ட நாகராஜ், ஒரு பரிதாபக்குறிய நபராக மாறி நான்கு சுவற்றுக்குள் முடங்கி கிடக்கிறார். அவரது மனைவி மாற்றுத்திறளாளி உமா-வே அவருக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். 

 

இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது: இது சம்பந்தமாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்