அயோத்தி ராமர் கோயில் செல்லும் பக்தர்கள் வசதிக்காக, சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை, வருகின்ற பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் தொடங்குகிறது. ஸ்பை ஜெட் தனியார் பயணிகள் விமான நிறுவனம், இந்த சென்னை- அயோத்தி- சென்னை, தினசரி விமான சேவையை நடத்துகிறது. இந்த விமானத்தில் பயணிக்க முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில்
இந்தியாவில் உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டு உள்ளது. இதை அடுத்து அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா, வருகின்ற ஜனவரி 22 ஆம் தேதி, திங்கள் கிழமை நடக்க இருக்கிறது. இதனால் சென்னையில் இருந்து, அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு, ஏராளமான பக்தர்கள் செல்வார்கள் என்று தெரிகிறது. இதை அடுத்து தனியார் விமானம் நிறுவனமான, ஸ்பை ஜெட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமான நிறுவனம், வருகின்ற பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல், சென்னை- அயோத்தி- சென்னை, இடையே நேரடி விமான சேவைகளை தொடங்குகிறது.
சென்னை உள்நாட்டு விமான நிலையம்
பிப்ரவரி ஒன்றாம் தேதி வியாழக்கிழமை முதல், சென்னை உள்நாட்டு விமான நிலையம் டெர்மினல் ஒன்றில் இருந்து, இந்த ஸ்பைஸ் ஜெட் பயணிகள் விமானம் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து பகல் 12.40 மணிக்கு புறப்படும், இந்தப் பயணிகள் விமானம், மாலை 3.15 மணிக்கு, அயோத்தி விமான நிலையம் சென்றடையும். அதன் பின்பு அதே விமானம் மாலை 4 மணிக்கு அயோத்தியில் இருந்து புறப்பட்டு, மாலை 6.20 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து சேரும்.
ஒரே நேரத்தில் 180-க்கும் அதிகமான பயணிகள்
இந்த விமானத்தில் பயணம் செய்வதற்கு விமான டிக்கெட் கட்டணம் ரூ.6,499. மேலும் இந்த விமானம் போயிங் 737-8. ரகத்தைச் சேர்ந்தது. எனவே இந்த விமானத்தில் ஒரே நேரத்தில் 180-க்கும் அதிகமான பயணிகள் பயணிக்க முடியும். இந்த அயோத்தி விமானத்தில், பயணம் செய்வதற்கான முன்பதிவை, ஸ்பை ஜெட் தனியார் விமான நிறுவனம், இந்த ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் தொடங்கி நடத்திக் கொண்டு இருக்கிறது. சென்னை- அயோத்தி- சென்னை, இடையே நேரடி விமான சேவை, பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் தொடங்குவதால், அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் ராம பக்தர்கள், மற்றும் ஆன்மீகவாதிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்று, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.