சொந்த வீடு கனவு 

Continues below advertisement

எவ்வளவு தான் சொத்து , பணம் இருந்தாலும் நமக்கென்று ஒரு வீடு இல்லை என்றால் அது மனக்குறையாகவே இருக்கும். சொந்த வீடு வாங்க முடியவில்லையே என்பது பலரின் ஏக்கமாகவும் கனவாகவும் இருந்து வருகிறது. சொந்த வீடு வாங்க வேண்டும் , வாங்கிய இடத்தில் விரைவில் வீடு கட்ட வேண்டும் என கவலையில் இருப்பவர்கள் ஏராளம்.

ஒப்பந்தத்தை மீறி பணிகளை முடிக்க தாமதம்

Continues below advertisement

நாம் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை கொண்டு , சொந்த வீடு கட்ட வேண்டும் என பல கனவுகளுடன் இருப்போம். ஆனால் , இதில் நாம் முக்கிய விஷயங்களை ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். இதில் மிக முக்கியமாக இருப்பது , நம் வீட்டை கட்டும் பணியை யாரிடம் ஒப்படைக்கிறோம் என்பது தான். நாங்கள் குறைந்த விலையில் வீடு கட்டி தருகிறோம் என்று விளம்பரங்களை பார்த்து ஏமாறாமல் , அந்த நிறுவனங்கள் பற்றி விசாரித்து தெரிந்து கொண்டு பின்பு பணம் மற்றும் ஒப்பந்தங்களை போட வேண்டும். ஒரு சில நிறுவனங்கள் பணம் வாங்கி கொண்டு வீடு கட்டி ஒப்படைக்கும் பணிகளை மிக தாமதம் செய்கிறது.

வீட்டை ஒப்படைக்காமல் தாமதித்த கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்

செங்கல்பட்டு தையூர் கிராமத்தில் அக்ஷயா நிறுவனம் சார்பில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்படுகிறது. அதில் வீடு வாங்க, மஞ்சுளா கிருஷ்ணா என்பவர், 2017 - ல் ஒப்பந்தம் செய்தார். இதன்படி, அவர் 52.42 லட்சம் ரூபாயை, பல்வேறு தவணைகளில் செலுத்தி வந்துள்ளார். 2017 - ம் ஆண்டு பணிகள் முடிந்து வீடு ஒப்படைக்கப்படும் என, கட்டுமான நிறுவனம் ஒப்பந்தத்தில் தெரிவித்து இருந்தது.

ஆனால் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வீட்டை காலத்தில் ஒப்படைக்கவில்லை. இதனால், வீடு வாங்குவதை கைவிட முடிவு செய்த மஞ்சுளா கிருஷ்ணா அதை கட்டுமான நிறுவனத்துக்கு தெரிவித்தார். இதற்கு கட்டுமான நிறுவனம் தரப்பில் உரிய பதில் வராத நிலையில் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் மஞ்சுளா கிருஷ்ணா புகார் செய்தார்.

இந்த புகார் தொடர்பாக ரியல் எஸ்டேட் ஆணைய விசாரணை அலுவலர் உமா மகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு ; 

புகாரில் குறிப்பிடப்பட்ட கட்டுமான நிறுவனம், குறிப்பிட்ட காலத்தில் வீட்டை ஒப்படைக்காதது உறுதியாகிறது. அந்நிறுவனத்திடம் பணம் செலுத்தியவர், வீட்டுக்காக 7 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குறிப்பிட்ட காலத்தில் வீடு கிடைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்காக கட்டுமான நிறுவனம் மனுதாரருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும்.

அத்துடன் வழக்கு செலவுக்காக ஒரு லட்சம் ரூபாயை அந்நிறுவனம் வழங்க வேண்டும். இத்தொகையை, 90 நாட்களுக்குள் கட்டுமான நிறுவனம் அளிக்க வேண்டும் என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.