சென்னை குறித்து இன்றைய தினத்தில் யாரிடம் கேள்வி எழுப்பினாலும் பரிதாபமாக உச்சு கொட்டுவார்கள். அப்படியான நிலைமைக்கு சென்னையை புரட்டிப் போட்டுள்ளது மிக்ஜாம் புயல். இந்த புயல் குறித்து வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் எச்சரிக்கை வழங்கப்பட்டிருந்ததால் அரசும் மாநகராட்சி நிர்வாகமும் மிகவும் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை தயாரிப்புகளுடன் இருந்தது. ஆனால் அந்த தயாரிப்புகள் ஓரளவிற்கு புயலின் தாக்கத்தின் போது, முன்உதவியாக இருந்தாலும் புயலின் கோரதாண்டவத்தின் முன்னிலையில் போதுமானதாக இல்லை. 


உலகத்தில் உள்ள எந்த பெரிய நகரத்திலும் வெள்ளத்தை கட்டுப்படுத்த தொழில்நுட்பம் இல்லாமல் தத்தளித்துதான் வருகின்றது. ஆனால் ஒரு நாள் பெய்ய வேண்டிய மழை ஒரு மணி நேரத்தில் பெய்தாலும் 6 மணி நேரத்துக்குள்ளாக மழை நீர் வடிந்தால் சிறப்பான மழைநீர் வடிகால் கட்டமைப்பு என கூறப்படுகின்றது. அப்படிப் பார்த்தால் 3 மாதங்கள் பெய்யவேண்டிய மழை 30 மணி நேரத்திற்குள் பெய்துள்ளது என்றால் அது முற்றிலுமாக வடிய எடுத்துக் கொள்ளும் நேரம் எவ்வளவு ஆகும் என நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள். 




சென்னையில் தாழ்வான பகுதிகளில் இருந்த மக்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டதால் உயிர்சேதங்கள் பெருமளவு தவிர்க்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலுக்கு சென்னையில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து, வெள்ள நீர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். சென்னையின் நீர்நிலைகளான அடையாறு, கூவம், பக்கிம்காம் கால்வாய் முதல் பிரதான சாலைகள், மூலை முடுக்குகளில் எல்லாம் வெள்ள நீர் நிரம்பிச் சென்றது. இருசக்கர வாகனங்கள் தொடங்கி, கார்கள், மினி லாரிகள் ஆட்டோக்கள் எல்லாம் வெள்ள நீரில் அடித்துச் செல்லட்டது. இந்த காட்சிகளைப் பார்த்தபோது 2004ஆம் ஆண்டு வந்த சுனாமியைத்தான் நினைவுக்கு கொண்டுவந்தது. 


முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்


சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு டிசம்பர் 4 மற்றும் 5ஆம் தேதியில் பொது விடுமுறை அளிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து சென்னை முழுவதும் மொத்தம் 411 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் 18ஆயிரத்து 200 மக்கள் தங்கவைக்கப்பட்டனர். இதில் மொத்தம் 2.5 லட்சம் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. ஒட்டுமொத்தம் சென்னை முழுவதும் பாதுகாப்பு காரணங்களுக்காக மின்சாரம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாலும் மழைப் பொழிவு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்ததாலும் மின்சார ரயில்கள் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அத்தியாவசிய தேவைகளை கணக்கில் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரயில் மட்டும் இயல்பை விட மிகக் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டது. வெளியூர்களுக்குச் செல்லும் விரைவு ரயில்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டது. 47 நாடுகளை இணைக்கும் சென்னை சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள, மீனம்பாக்கத்தில் மட்டும் மணிக்கு 104 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் 60க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. இதுமட்டும் இல்லாமல் விமான ஓடுதளத்தில் மழை நீர் வெள்ளம் தேங்கியதால் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. மெட்ரோ ரயில் சேவைகள் மட்டும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இயக்கப்பட்டது. 




வெள்ள நீர் ஏன் வடியவில்லை


சென்னையில் தற்போது உள்ள மக்கள் தொகை என்பது ஒரு சதுர கிலோமீட்டருக்கு 28 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இதனால் ஏற்படும் நெரிசலால் சென்னை எதிர்கொள்ளும் மழை நீர் வடியாமல் உள்ளது. சென்னையில் புவியியல் அமைப்பானது ஒட்டுமொத்தமாக  20 செ.மீட்டர் மழையை தாக்கு பிடிக்கும். ஆனால் சென்னையில் மிக்ஜாம் புயலின் போது பெய்த மழை மட்டும் 40 செ.மீட்டர். சென்னை வெள்ளத்தில் ஸ்தம்பிக்க முக்கிய காரணமாக உள்ளது. புயல் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கடல் முகத்துவாரங்கள் வழியாக  வெள்ள நீரினை உள்வாங்காமல் மிகப் பெரிய அலைகளினால் கடல் நீரினை வெளியே தள்ளிக்கொண்டு இருந்தது. இதுவும் மழைநீர் தேங்க முக்கிய காரணம்.  






இவையெல்லம் சென்னையை ஸ்தம்பிக்க வைத்த நிலையில் சென்னையைச் சுற்றியுள்ள மிகப்பெரிய ஏரிகளான புழல், செம்பரம்பாக்கம், பள்ளிகரணை ஏரி, பூண்டி ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இவையெல்லாமல் சின்னச் சின்ன ஏரிகளும் நிரம்பி வெள்ளக்காட்டில் கட்டிடங்கள் தெரிய ஆரம்பித்தது. ஒட்டுமொத்தமாக 30 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டதால் அடையாறு, கூவம் நதிகள் இருபுறமும் கரைபுரண்டு ஓடியது. பல இடங்களில் சாலைகளுக்குள் ஆற்று நீர் புகுந்ததால் சாலைகள் துண்டிக்கப்பட்டது. தொலைதொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் சேவைகள் தடைப்பட்டது. 




2015 வெள்ளம் vs 2023 வெள்ளம்


2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்கு 33 செ.மீட்டர் அளவிற்கு பெய்த மழைதான் பிராதான காரணமாக இருந்தாலும், முன் அறிவிப்பு இல்லாமல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட நீரினால்தான் ஒட்டுமொத்த சென்னை மாநகரமும் வெள்ளத்தில் மூழ்கி, உயிர் சேதங்கள் மற்றும் பொருள் சேதங்கள் ஏற்பட்டன.  ஆனால் 2023ஆம் ஆண்டு சென்னை மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியதற்கு முக்கிய காரணமே மழைதான். சென்னைக்கு மட்டும் மிக்ஜாம் புயல் வாரி இரைத்துச் சென்ற மழையின் அளவு 40 செ.மீட்டர். இது இல்லாமல் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் பெய்த மழையால் சென்னையை நோக்கி வந்த  வெள்ளத்தின் அளவு கணக்கிடப்படாதது. இந்த  நிலையில் சென்னையில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மழைநீர் வடிகால்கள் வழியாக மழை நீர் சென்று நான்கு பெரிய வடிகால் பாதை மூலம் கடலை நோக்கி செல்லவேண்டும். எவ்வளவு கோடிகளை கொட்டி திட்டங்களைத் தீட்டினாலும் இயற்கை அவற்றையெல்லாம் தவிடுபொடி ஆக்கிவிடும் என்பதை மீண்டும் உணர்த்திவிட்டுச் சென்றுள்ளது மிக்ஜாம்.