Cyclone Mandous: சென்னை மெரினாவில் சமீபத்தில் திறக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப்பாதை மாண்டஸ் புயலால் பெய்து வரும் கனமழையால் சேதம் அடைந்துள்ளது. 


வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயலால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களான, சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கடற்கரைக்கு பொது மக்கள் கடற்கரைக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. தற்போது, புயலினால், வீசிவரும் பலத்த காற்றினால் சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்புப்பாதை சேதம் அடைந்துள்ளது. 


தென்மேற்கு வங்க கடலில் உள்ள தீவிர புயல் "Mandous" கடந்த 06 மணி நேரத்தில் 13 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 5.30 மணி நேரத்தில்  மையம் கொண்டிருந்தது. இது  திருகோணமலைக்கு (இலங்கை) வடக்கு-வடகிழக்கே சுமார் 270 கி.மீ., யாழ்ப்பாணத்திலிருந்து 230 கி.மீ கிழக்கு-வடகிழக்கே (இலங்கை), காரைக்காலில் இருந்து கிழக்கே 200 கி.மீ. மற்றும் சென்னைக்கு தென்-தென்கிழக்கே சுமார் 270 கி.மீ.  தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் மிக கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பாதை


மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை ஏற்று, மெரினா கடற்கரையில் அவர்களுக்கு என சிறப்பு பாதை அமைத்து தரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, ரூ.1.14 கோடி செலவில் பாபூல், சிவப்பு மராந்தி மற்றும் பிரேசிலிய மரங்களால் ஆன, சக்கர நாற்காலிகள் செல்லும் வகையிலான புதிய பாதை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டது. விவேகானந்தர் இல்லம் அருகே சாலையில் இருந்து  கடற்கரை வரையில் 263 மீ நீளம் மற்றும் 3மீ அகலத்துடன் இந்த பாதை வடிவமைக்கப்பட்டது.


சென்னை மாநகராட்சி மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தில் ஒரு பகுதியாக, நடைபாதை வழியாக செல்லும் மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் கடல் அழகினை ரசிப்பதற்காக சிறப்பு சக்கர நாற்காலி வண்டி வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த நவம்பர் 27-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.


மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி:


சென்னை மாநகராட்சியின் முயற்சியின் மூலம் அமைக்கப்பட்டுள்ள, புதிய பிரத்யேக பாதை மாற்றுத்திறனாளிகளிடையே வரவேற்பை பெற்றது. இனி மற்றவர்களை போல தாங்களும் கடலுக்கு அருகில் சென்று அதன் பேரழகை ரசிக்க முடியும் எனவும், கடல் அலைகள் தங்களை தீண்டும் அந்த ஆனந்த அனுபவத்தை உணர முடியும் எனவும், மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.


"அன்பு பாதை”


இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகையில், ”  மாற்றுத்திறனாளிகளை அனைவரும் மதிக்க வேண்டும், தனி கவனம் செலுத்த வேண்டும். சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் உரிமைக்காக உருவாக்கிய பாதை ’அன்பு பாதை' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.  இந்த அன்பு பாதையால் கிடைக்கும் நன்மையும் மகிழ்வும் எத்தனை கோடி கிடைத்தாலும் கிடைக்காது என்று பேசினார். அவர்கள் அடைந்த மகிழ்ச்சியால் நானும் மகிழ்ந்தேன்” என்று கூறிப்பிட்டு இருந்தார்.