உணவு பொட்டலத்தில் மறைத்து வைக்கப்பட்ட கஞ்சா.. சென்னை விமான நிலையத்தை குறிவைக்கும் கடத்தல்காரர்கள்
சென்னை விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்த உணவு பொட்டலங்களை சோதனையிட்ட போது 6 பாக்கெட்டுகளில் 2800 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது. இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் அவரை கைது செய்தனர்.

எல்லை பகுதிகள் வழியாக நாட்டுக்குள் தங்கம், போதை பொருள் ஆகியவை கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து எல்லை வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகாரிகளுக்கு பெரும் சவாலை அளித்து வருகிறது.
உணவு பொட்டலத்தில் மறைத்து வைக்கப்பட்ட கஞ்சா:
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் ஒன்பது கிலோ கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
கடந்த ஜூன் 10 ஆம் தேதி இரவு, தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து கொழும்பு வழியாக சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த ஒருவரை நம்பத்தகுந்த உளவுத் தகவல் அடிப்படையில் சென்னை சர்வதேச விமான நிலைய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இடைமறித்து சோதனையிட்டனர்.
இதில், சந்தேகிக்கும் வகையில் இருந்த அவரது உணவு பொட்டலங்களை சோதனையிட்ட போது 6 பாக்கெட்டுகளில் 2800 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது. இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் அந்த பயணியை கைது செய்து ஆலந்தூர் தனி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இவரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
சென்னை விமான நிலையத்தை குறிவைக்கும் கடத்தல்காரர்கள்:
கடந்த ஜூன் 3ஆம் தேதி, விமான நிலைய ஆணையரகத்தில் தபால் மதிப்பீட்டு துறையில் சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான பார்சல்களை ஸ்கேன் செய்த போது 2 பாக்கெட்களில் 1.022 கிலோ கஞ்சா இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
கடந்த மே 16 ஆம் தேதி, தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து கொழும்பு வழியாக சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த ஒருவரை சென்னை சர்வதேச விமான நிலைய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இடைமறித்து சோதனையிட்டனர். அவரது உடைமைகளை கொண்ட பெட்டிகளில் 6.100 கிலோ கஞ்சா பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது இந்த சோதனையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட அந்த பயணியை ஆலந்தூர் தனி நீதிமன்ற மாஜிஸ்திரேட் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதற்கு முன்பு, மும்பை விமான நிலையத்தில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட 16 கிலோகிராம் ஹெராயினை வருவாய் புலனாய்வு இயக்குனரக அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக கானாவைச் சேர்ந்த பயணி மற்றும் பெண் ஒருவரை கைது செய்தனர்.
இதையும் படிக்க: Boeing 787-8: போதும்டா சாமி - இனி போயிங் 787-8 விமானங்களுக்கு அனுமதி இல்லை? டாடாவின் ஏர் இந்தியாவிற்கு ஆப்பு?





















