சென்னை மாநகர பேருந்துகளில் மாதாந்திர பாஸ்களை பெரும் வசதி விரைவில், Chennai One செயலில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Continues below advertisement

சென்னை ஒன் - Chennai One 

சென்னையில் போக்குவரத்து சேவைகளை ஒருங்கிணைப்பதற்காக, கும்டா-CUMTA என்ற போக்குவரத்து குழுமம் ஏற்படுத்தப்பட்டது. இந்த குழுமம் வாயிலாக 'சென்னை ஒன்' (Chennai One) என்ற செயலி புதிதாக உருவாக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 22-இல் துவக்கி வைக்கப்பட்ட இந்த செயலி வாயிலாக மெட்ரோ ரயில், மின்சார ரயில், மாநகர பேருந்துகளில் பயணிப்பதற்கான டிக்கெட்டுகளை QR குறியீடு வழியாக பெறலாம். இந்த மூன்று சேவைகளுக்கும் சேர்த்து அல்லது தனித் தனியாகவும் மக்கள் இந்த செயலியில் டிக்கெட் பெற முடியும். சென்னை ஒன் செயலி அறிமுகம் செய்யப்பட்ட 30 நாட்களில், செயலியை 4.58 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். சென்னையில் பொதுமக்கள் இடையே இந்த செயலி மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

73 லட்சம் ரூபாய் வருவாய்

இந்த காலகட்டத்தில், மொத்தம் 3.7 லட்சம் டிக்கெட்டுகள், செயலி மூலம் பெறப்பட்டுள்ளன. இதன்படி சராசரியாக ஒரு நாளைக்கு 22,000 பேர் சென்னை ஒன் செயலியில் டிக்கெட் எடுப்பதாக தெரிய வந்துள்ளது. இதன் வாயிலாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு 73 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

Continues below advertisement

இந்நிலையில் சென்னை ஒன் செயலியில், மாநகர போக்குவரத்து கழக மாதாந்திர பயணச்சீட்டு பெறும் வசதியை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிற்றுந்துகளில் "சென்னை ஒன்" செயலி

தற்போது சென்னை ஒன் செயலியில் மாநகர போக்குவரத்து கழக சிற்றுந்துகளுக்கு டிக்கெட் பெறும் வசதி இல்லை. சென்னையில் பல்வேறு வழித்தடங்களில், 146 சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. வழக்கமான பேருந்துகளை விட இதற்கு வேறுபட்ட கட்டணம் உள்ளது. இந்த கட்டண விபரங்களை சென்னை செயலியில் ஒன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான வசதியும் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக கும்டா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

மாதாந்திர பாஸ் - MTC Bus Pass

சென்னை மாநகர பேருந்துகளுக்கான மாதாந்திர பாஸ்களை பெரும் வசதி விரைவில் சென்னை ஒன் செயலில் வர இருப்பதாக CUMTA தகவல் தெரிவித்துள்ளது. ரூபாய் 1000 மற்றும் 2000 ஆகிய இரு வகை பாஸ்களை ஆன்லைனில் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாதாந்திர பேருந்து பாஸ்கள்ஃ முதல் முறையாக ஆன்லைன் மூலம் வழங்கப்பட உள்ளது.