சென்னை கிண்டியில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (The Indian Institute of Technology – Madras (IIT-M) மாணவர்கள் உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் ஐஐடி வளாகத்தில் உள்ள மேலும் 18 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதியான 10 பேரில், மூன்று பேருக்கு நோய்தொற்றுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. ஏழு பேருக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் பரிசோதனைகளை அதிகரிக்கவும், தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வந்தது. அதன் பிறகு படிப்படியாக கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததன் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு சுழற்சி முறையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது பொதுத்தேர்வுகள் நடத்த அட்டவணையும் வெளியிடப்பட இருக்கிறது.
இந்தநிலையில், இந்தியாவின் தலைநகரான டெல்லியில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் தலைத்தூக்க தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதிக்குப் பிறகு புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகி வருகிறது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்