செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி போடுவோருக்கு குலுக்கல் முறையில் சிறப்பு பரிசு வழங்கும் முயற்சியை ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து தன்னார்வலர்கள் மேற்கொண்டுள்ளனர். 

 


கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் உருவாக்கிய கொரோனா வைரஸ் தொற்றானது உலகம் முழுவதும் வேகமாக பரவி தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை காரணமாக தமிழகம் கடந்த இரண்டு மாதங்களாக மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபடுவதற்கு முறையான மருந்துகள். இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீள்வதற்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத காரணத்தினால், தற்போது நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதற்கு கொரோனா தடுப்பூசி மட்டுமே உள்ளது என்பது மருத்துவர்களின் கருத்து. கொரோனா  வைரஸ் தடுப்பு ஊசியை செலுத்தி கொள்ளும் பட்சத்தில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதிக்கப்படாமல் இருப்பதற்கு அதிக அளவு வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அப்படியே பாதிப்பு ஏற்பட்டாலும் உயிர் சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்பது தற்போது தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது.

 


இந்தியாவை பொறுத்தவரை தற்போது இரண்டு தடுப்பூசிகளும் அனுமதி அளிக்கப்பட்டு பயன்படுத்தி வருகிறார்கள். கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகியவை தற்போது பயன்படுத்தி வருகிறார்கள். சமூக ஊடகங்களில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் குறித்து பல்வேறு வதந்திகள்  தொடர்ந்து பரவி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் தடுப்பூசியை செலுத்தி கொள்வதில் தயக்கம் காட்டி வருகிறார்கள். நகர்ப்புறங்களை காட்டிலும்  கிராமப்புறங்களில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை 

சற்று குறைவாகவே இருக்கிறது, இதற்காக அரசு சார்பில் பல்வேறு சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அரசு தரப்பில் இருந்து கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் பாதுகாப்பான ஒன்றுதான் என தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தி வருகிறார்கள். 

 


அதேபோல் தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்கள் பலரும் தடுப்பூசிகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி போடுவோருக்கு குலுக்கல் முறையில் சிறப்பு பரிசு பொருட்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு ஏற்பட்டுள்ள தயக்கத்தை போக்கவும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் எஸ்.டி.எஸ்., பவுண்டேஷன் சேம்ப்பியன் டெவலப்மென்ட் டிரஸ்ட் மற்றும் சிராஜ் டிரஸ்ட் ஆகிய தன்னார்வ அமைப்பினர்  கோவிட் இல்லா கோவளம் என்ற தலைப்பில் கோவளம் ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து இந்தக் குலுக்கல் பரிசினை அறிவித்துள்ளனர்.

 


இம்முகாமில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் 10 நபர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தடுப்பூசி போட முன்வந்த காரணத்தால் அவர்களுக்கு பல்வேறு பரிசுகள் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் மிக்சி, கிரைண்டர் , மொபைல் போன்கள், சேலை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட உள்ளன.


 

இதுகுறித்து நம்மிடம் பேசிய தன்னார்வலர் குழுவை சேர்ந்த சுந்தர் கூறுகையில்  , ‛‛கொரோனா வைரஸ் தொற்று இல்லா கோவளம் உருவாக்குவது தான் இந்த முகாமுடைய நோக்கமாகும். கோவளம் மட்டுமல்லாமல் பக்கத்து கிராமங்களிலிருந்தும் வந்து தடுப்பூசி செலுத்திக்  கொள்கிறார்கள்.தடுப்பூசியின் முக்கியத்துவத்தை கூறியும், சிறப்பு பரிசுகள் மூலம் ஊக்கப்படுத்தியும், தடுப்பூசி செலுத்த ஆர்வம் ஏற்படுத்தி உள்ளோம். 


அதன்படி ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்கும் 10 பேரை, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து, மிக்சி, கிரைண்டர், மொபைல் போன் உள்ளிட்ட பரிசுகள் வழங்குவோம். இந்த வாரம் வென்றவர்களுக்கு, அடுத்த வாரம் சனிக்கிழமையில், பரிசு வழங்குவோம்.அதேபோல், முகாம் முடியும் இறுதி நாளில், மொத்தமாக பங்கேற்ற அனைவரில், ஐந்து பேரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு, 'பைக், ப்ரிஜ் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட உள்ளது  என தெரிவித்தார்.

 


கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக தடுப்பூசி போட்டுக் கொள்ளும் மக்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என அறிவித்து  மக்களை ஊக்குவித்து வரும் தன்னார்வலர்களின் இந்த முயற்சி  பாராட்டுகளைப் பெற்றுள்ளது.