நகராட்சி,  மாநகராட்சிகளில் பாதாள சாக்கடைகளில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில்  மனிதர்களை ஈடுபடுத்தினால் அதற்கு ஆணையர் தான் பொறுப்பு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும்  நடைமுறையை  முழுவதுமாக ஒழிக்கக் கோரியும், ஊழியர்களை இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரியும், சஃபாய் கர்மாச்சாரி அந்தோலன் என்ற அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.


இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், உயர் நீதிமன்றம் எதிரில் பாதாள சாக்கடையில் மனிதர்கள் இறங்கச் செய்து சுத்தம் செய்யப்படுவதாக கடந்த வாரம் தலைமை நீதிபதி அமர்வில் மனுதாரர் சங்கம் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது


இந்நிலையில், இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யபட்டது. மேலும், கடந்த ஜூலை 26ம் தேதி மாதவரத்தில் பாதளச் சாக்கடையில்  சுத்தம் செய்ய இறங்கிய 2 நபர்கள் இறந்துள்ளதாக தெரிவித்தார்.


மனுதாரர் தாக்கல் செய்த இந்த அறிக்கை குறித்து பதிலளிக்க அரசுத்தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, ஒரு வாரத்திற்குள் மனுவிற்கு பதிலளிக்க சென்னை மெட்ரோ குடிநீர் வழங்கல் துறைக்கு உத்தரவிட்டனர்.மேலும், பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்ய உயர்நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது என நீதிபதிகள் தெரிவித்தனர்.


மேலும், பாதாள சாக்கடைகளில்  இறங்கி சுத்தம் செய்ய மாநகராட்சி மற்றும் தனியார் ஒப்பந்ததார்களோ ஊழியர்களை நியமிக்கக்கூடாது எனவும் அவ்வாறு நியமித்தால் அதற்கு  மாநகராட்சி ஆணையர்களே பொறுப்பு என தெரிவித்தனர்.


 




மற்றொரு வழக்கு


டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில், மதுபானங்களை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்றுவிட்டு, காலி மதுபாட்டில்களை  திரும்ப ஒப்படைக்கும் பட்சத்தில் 10 ரூபாயை திரும்ப வழங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம், டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.


இந்த திட்டம், 10 மலைப்பகுதி மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாநிலம் முழுவதும் இதை அமல்படுத்துவது குறித்து அறிக்கை அளிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.


இதுதொடர்பான வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.


அதில், மலைப்பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட 88 லட்சம் மதுபாட்டில்களில் 74 சதவீத பாட்டில்களான 52 லட்சம் பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், மலைப்பகுதிகளில் ஏழு, எட்டு கடைகள் மட்டுமே இருக்கும் என்பதால் அங்கு இத்திட்டத்தை அமல்படுத்துவது எளிது எனக் குறிப்பிட்ட அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், மாநிலம் முழுவதும் இதை அமல்படுத்துவது சிரமம் எனக் குறிப்பிட்டார்.


டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்களில் மது அருந்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பாட்டில்களை திரும்பப் பெறப்படும் நிலையில், கடையில் மதுபானத்தை வாங்கிச் சென்று வேறு இடங்களில் மது அருந்தும் பட்சத்தில் அந்த பாட்டில்களை திரும்பப் பெறுவது சிரமம் எனக் குறிப்பிட்டார்.


பின்னர் ஒரு நாளைக்கு எத்தனை பாட்டில்கள் விற்கப்படுகின்றன என நீதிபதிகள் கேள்வி எழுப்பிய போது, மாதம் 51 கோடி பாட்டில்கள் விற்கப்படுவதாக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பதிலளித்தார்.


இந்த 51 கோடி பாட்டில்களை   திரும்பப் பெறாவிட்டால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை சிந்திக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்துவதில் உள்ள சிரமங்கள் குறித்த அரசின் அறிக்கையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.