Chennai Weather Forecast: தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையைப் பொறுத்தமட்டில் கடந்த சில நாட்களாகவே மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இன்றும் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், அவ்வப்போது மழை துளித்துளியாய் பெய்து வருகிறது.
இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழை:
இந்த நிலையில், சென்னையில் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை நிலவரம் எப்படி இருக்கும்? என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி, சென்னையில் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இன்றும், நாளையும் சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புகள் அதிகம் ஆகும். இன்று அதிகபட்சம் 32 டிகிரி செல்சியசும், நாளை அதிகபட்சம் 33 டிகிரி செல்சியஸ் மட்டுமே வெப்பநிலை நீடிக்கும். இந்த இரு நாட்களும் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் மட்டுமே இருக்கும்.
அடுத்த செவ்வாய் வரை இப்படித்தான்:
நாளை மறுநாளான 25ம் தேதி மற்றும் 26ம் தேதியாவ சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இதனால் அந்த இரண்டு நாட்களிலும் சென்னையில் லேசான மழை பெய்வதற்கு வாய்ப்புகள் பிரகாசம் ஆகும். 25ம் தேதி அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியசும், குறைந்த பட்சம் 28 டிகிரி செல்சியசும் வெப்பநிலை இருக்கும்.
வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனே காணப்படும். லேசான மழைப்பொழிவிற்கும் வாய்ப்புகள் உண்டு. அதிகபட்சம் 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியசும் வெப்பநிலை காணப்படும்.
வரும் 28ம் தேதி திங்கள்கிழமை அன்று, ஓரளவு மேகமூட்டமாக சென்னையில் காணப்படும். அடுத்த வார செவ்வாய்கிழமையும் வானம் மேகமூட்டமாகவே சென்னையில் காணப்படும். அந்த இரண்டு நாட்களுமே அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியசும் இருக்கும்.
வாகன ஓட்டிகள் அவதி:
சென்னையைப் பொறுத்தமட்டில் பல இடங்களிலும் மெட்ரோ, சாலை மற்றும் மேம்பால பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. மழை அவ்வப்போது பெய்து வருவதால் இந்த பணிகளில் தொய்வும் ஏற்பட்டு வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், காலையில் வேலைக்கு மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மழை சாலைகளில் தேங்காமல் இருப்பதற்கு மாநகராட்சி சார்பிலும் முன்னேற்பாடுகளும் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றது.