சென்னையில் கஞ்சா விற்ற இருவருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 


கஞ்சா விற்றதாக கடந்த 2019 ம் ஆண்டு தேனியை சேர்ந்த கோட்டைசாமி மற்றும் சென்னையை சேர்ந்த உதயக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, ஆட்டோவில் கஞ்சாவை கடத்தி விற்ற குற்றத்துக்காக கோட்டைசாமி, உதயகுமார் ஆகியோருக்கு ரூ. 4. 60 லட்சம் அபராதமும், தலா 12 ஆண்டுகள் சிறை விதித்தும் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 


திருவண்ணாமலையில் கஞ்சா விற்பனை:


உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ஆகும். இந்த கோவில் பின்புறம் சிவனே மலையாக காட்சி தருகிறார். இந்த மலையை சுற்றிலும் 14 கிலோமீட்டர் கிரிவலப்பாதை அமைந்து உள்ளது. இங்கு கிரிவலம் வெளிநாடு, வெளிமாநிலம், வெளியூர் பகுதிளில் இருந்து லட்ச கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். இதுமட்டுமின்றி கிரிவலப் பாதையில் ஏராளமான சாதுக்கள் தங்கி வசித்து வருகின்றனர்.


தற்போது திடீரென பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து காவிவேட்டியை கட்டிக்கொண்டு தங்கியுள்ளனர். இவர்களில் ஒருசிலர் கிரிவலப் பாதையில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக குற்றசாட்டுகள் அடிக்கடி எழுந்து வருகின்றது. மேலும் புகார் வரும் சமயங்களில் காவல்துறையினர் கிரிவலப்பாதையில் சோதனை நடத்தி கஞ்சா வைத்திருப்பவர்களை பிடித்து வருகின்றனர். இருந்தபோதிலும் கிரிவலப் பாதையில் கஞ்சா விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது என்றும் மலை சுற்ற வரும் ஆன்மீக பக்தர்களின் முன்னிலையில் விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 


இந்நிலையில் மர்மநபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருவண்ணாமலை துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன், தாலுகா காவல்நிலைய ஆய்வாளர் விஜயபாஸ்கர் ஆகிய காவல்துறையினர் இன்று கிரிவலப் பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நித்தியானந்தா ஆசிரமம் அருகே கிரிவலப்பாதையில் காவி உடை அணிந்த ஒருவர் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.பின்னர் அவரை காவல்துறையினர் சோதனை செய்தபோது, அவரிடம் இருந்து சுமார் ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து சாதுவை தாலுக்கா காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.


அந்த விசாரணையில் அவர், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா, ஜீவா நகரை சேர்ந்த ஆறுமுகம் வயது (48) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து ரூபாய் 7 ஆயிரம் மதிப்புடைய கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இவர் ஆந்திராவில் கஞ்சாவை விலைக்கு வாங்கி வந்து திருவண்ணாமலையில் சாதுக்களின் போர்வையில் பிறருக்கு கூடுதல் விலைக்கு விற்று வந்தததாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து கஞ்சா விற்பனையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கிரிவலப்பாதையில் சில நாட்களுக்கு முன்பு கஞ்சா போதையில் போலி சாது பக்தர்களிடம் ரகளையில் ஈடுப்பட்டது குறிப்பிடத்தக்கது.